ஆந்திர மாநிலத்தில் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் பவன் கல்யாண். தெலுங்கு திரையுலகில் தனக்கென மிகப் பெரிய ரசிகர் பட்டாளத்தைக் கொண்டுள்ள இவர், அரசியல் கட்சியைத் தொடங்கித் தேர்தலில் போட்டியிட்டு அதில் குறிப்பிடத்தக்க வெற்றியையும் பதிவு செய்துள்ளார். குறிப்பாக, கடந்த சட்டமன்ற தேர்தலில் அவர் வெற்றி பெற்று, ஆந்திர மாநிலத்தின் துணை முதல்வராகப் பொறுப்பேற்றுள்ளார்.
அமைச்சராகப் பதவியேற்ற சில மாத காலங்கள், அவர் சினிமாவில் நடிப்பதைத் தவிர்த்து வந்தார். பின்பு, தயாரிப்பாளர்களின் நிலையைக் கருத்தில் கொண்டு தான் சினிமாவில் நடிக்க இருப்பதாகக் கூறினார். பின்பு, ‘ஹரிஹர வீர மல்லு’, ‘ஓஜி’ போன்ற படங்களில் நடித்தார். இதில், ஓஜி மிகப் பெரிய வெற்றியைப் பதிவு செய்திருந்தது. பின்பு, ” உஸ்தாத் பகத் சிங்” படத்தில் நடித்த அவர், தற்போது சுரேந்தர் இயக்கத்தில் அடுத்த படத்தில் நடிப்பதற்குத் தயாராகி வருகிறார்.
இதற்கிடையில், துணை முதல்வர் பவன் கல்யாண் திரைப்படங்களில் நடிப்பதைத் தடை செய்ய வேண்டுமென ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி ஒருவர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அதில், ஹரிஹர வீர மல்லு திரைப்படத்தை விளம்பரப்படுத்தும் போது, பவன் கல்யாண் அரசு எந்திரத்தைப் பயன்படுத்தியதாகவும் குற்றம் சாட்டியிருந்தார். இதற்கு, “அரசியல்வாதியோ அல்லது பொது பதவியில் இருப்பவர்களோ திரைப்படங்களில் நடிப்பதற்கு அரசியலமைப்பு ரீதியாக எந்த தடையும் இல்லை என்று தெரிவித்த நீதிமன்றம், குற்றத்தை நிரூபிக்க மனுதாரர் போதிய ஆதாரங்களைச் சமர்ப்பிக்கவில்லை” எனக்கூறி மனுவைத் தள்ளுபடி செய்தது.
