காஞ்சிபுரம் மாவட்டம் மணிமங்கலம் அருகே மாடம்பாக்கத்தைச் சேர்ந்தவர் ஷம்சியா (26). இவருக்கு ஆஷிபா (8), அப்தர் (5) என இரண்டு குழந்தைகள். ஷம்சியாவின் கணவர் ஆசிப் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்னர் கடன் தொல்லையால் தற்கொலை செய்து கொண்டார். கணவர் இல்லாத நிலையில் 2 குழந்தைகளுடன் ஷம்சியா குடும்பம் நடத்த முடியாமல் தவித்துக்கொண்டிருந்தார்.
ஏற்கனவே கடன் தொல்லை அதிகமாக இருந்த நிலையில், கணவர் தற்கொலை செய்து கொண்டதால், கடன்காரர்களுக்குப் பணத்தைக் கொடுக்க முடியாமல், அவர்களிடம் அவமானப்படவேண்டிய நிலையில் ஷம்சியா தவித்தார். இதனால் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்திருக்கிறார்.
தற்கொலைக்கு முன்னதாக குழந்தைகளுக்கு அவர்கள் விரும்பிய ஐஸ்கிரீம், கேக், பிஸ்கட் ஆகியவற்றை வாங்கிக் கொடுத்துச் சாப்பிடச் செய்தார். பின்னர் குழந்தைகளுடன் கிராமத்துக்கு ஒதுக்குப்புறமாக வயல் வெளியில் நடந்து சென்றார். அங்குள்ள விவசாயக் கிணறு அருகே குழந்தைகளுடன் சிறிது நேரம் பேசினார்.
பின்னர் ஆட்கள் நடமாட்டம் இல்லாத நேரத்தில், 2 குழந்தைகளையும் கிணற்றுக்குள் வீசியதுடன், தானும் கிணற்றில் குதித்து மூழ்கினார். நீண்ட நேரத்துக்குப் பின்னர் கிணற்றில் குளிக்க வந்த 2 பேர், கிணற்றில் 3 சடலங்கள் மிதப்பது தொடர்பாக படப்பை காவல்துறை, தீயணைப்புப் படையினருக்குத் தகவல் தெரிவித்தனர். உடனே சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறை அதிகாரிகள் 3 பேரின் உடலை மீட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
கிணற்று மேட்டில் இருந்த பையில் வைக்கப்பட்டிருந்த தற்கொலைக் கடிதத்தை காவல்துறை கைப்பற்றியது. அதில், “கடன் தொல்லையால் கணவர் தற்கொலை செய்து கொண்ட பின்னர், நானும், குழந்தைகளும் அவமானப்பட்டோம். உதவிக்கு யாரும் இல்லாத நிலையில், அவமானத்துடன் உலகில் வாழப் பிடிக்காமல், என் கணவர் காட்டிய அதே வழியை, நானும் தேர்ந்தெடுத்தேன். 2 குழந்தைகளும், தாய் தந்தை இல்லாமல் அனாதையாகி விடக்கூடாது என்பதற்காக, குழந்தைகளையும் என்னோடு அழைத்துச் செல்கிறேன். வேறு வழியில்லாமல் மிகுந்த மனவேதனையுடன் செல்கிறோம். எங்களை அனைவரும் மன்னித்துக்கொள்ளுங்கள்” – எனக் குறிப்பிட்டிருந்தார்.
இதற்கு முன்பு, நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே கடன் தொல்லையால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் காரில் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் ஏற்படுத்திய அதிர்ச்சி கலைவதற்குள் இந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
