வாஷிங்டன்: அமெரிக்க டாலரில் இனி அதிபர் டிரம்பின் கையெழுத்தும் இடம்பெறும் என்று அந்நாட்டு அரசு நிர்வாகம் அறிவித்துள்ளது.
அமெரிக்க அதிபர் டிரம்பின் கையெழுத்து விரைவில் அந்நாட்டு டாலர் நோட்டுகளில் இடம்பெற உள்ளது. 1861ம் ஆண்டு டாலர் நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, பதவியில் இருக்கும் ஒரு அதிபரின் கையெழுத்து அதில் இடம்பெறுவது இதுவே முதல் முறையாகும். இது குறித்து அமெரிக்கக் கருவூல அதிகாரி பிராண்டன் பீச் வெளியிட்ட எக்ஸ் தளப்பதிவில்; அமெரிக்காவின் 250ம் ஆண்டு விழாவை முன்னிட்டு, அதிபர் டிரம்பின் கையெழுத்து, கருவூலத்துறை அமைச்சர் ஸ்காட் பெசென்ட்டின் கையெழுத்துடன் இணைந்து அமெரிக்க டாலரில் விரைவில் இடம்பெறும். இது வரலாற்றில் முதல் நிகழ்வாகும். இது அதிபரின் தலைமைத்துவம் மற்றும் அர்ப்பணிப்பை குறிக்கிறது,’ எனக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த மாதத்தின் துவக்கத்தில் அமெரிக்க சுதந்திரத்தின் 250வது ஆண்டைக் கொண்டாடும் வகையில், அதிபர் டிரம்பின் உருவம் பொறிக்கப்பட்ட 24 கேரட் தங்க நினைவு நாணயத்தின் இறுதி வடிவமைப்பிற்கு பெடரல் கலை ஆணையம் ஒப்புதல் அளித்தது குறிப்பிடத்தக்கது.
