வகுப்பறையில் மாணவிக்கு ப்ரொபோஸ் செய்த பேராசிரியர்; புரட்டி எடுத்த சக மாணவர்கள்!

பெங்களூரு அருகே நிலமங்கலா பகுதியில் உள்ள  தனியார் மருத்துவக் கல்லூரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது. இந்தக் கல்லூரியில் மைக்ரோபயாலஜி துறையில் உதவிப் பேராசிரியராக பணியாற்றி வரும் அப்துல் ரெஹ்மான் ஷெரீப் என்ற 50 வயது பேராசிரியர், வகுப்பறையில் மாணவர்களுக்கு பாடம் நடத்திக் கொண்டிருந்தார். அப்போது 19 வயது மாணவியிடம் திடீரென “ஐ லவ் யூ” என்று கூறியதுடன், அவர் தன்னை காதலிப்பதாகவும், முன்பு தான் “ஐ லவ் யூ” என்று சொன்னதாகவும் கூறினார்.

இது வகுப்பறையில் இருந்த அனைத்து மாணவர்களையும் அதிர்ச்சியில் உறைய வைத்தது. பேராசிரியர் மேலும் சில சாக்லேட்களை மாணவிக்கு வழங்கியதாகவும் கூறப்படுகிறது. உடனடியாக எதிர்ப்பு தெரிவித்த மாணவி, பேராசிரியரிடம் கடுமையாக வாக்குவாதம் செய்தார். “எனக்கு அப்படி எந்த எண்ணமும் இல்லை” என்று திட்டவட்டமாக மறுத்தார். இருப்பினும் பேராசிரியர் தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருந்து, “நீ என்னிடம் காதலிப்பதாக சொன்னாய், கல்லூரி சிசிடிவி காட்சிகளைப் எடுத்து பார், அதுவே சாட்சி” என்றார்.

மாணவி உடனடியாக “அந்த சிசிடிவி காட்சிகளைக் காண்பியுங்கள்” என்று ஆவேசமாகக் கேட்டார். ஆனால் பேராசிரியர் வகுப்பறையை விட்டு வெளியேறினார். இதைத் தொடர்ந்து கல்லூரி வளாகத்தில் சக மாணவர்கள் பேராசிரியரை சுற்றி வளைத்து கேள்வி எழுப்பினர். அப்போது சம்பவ இடத்திற்கு வந்த மாணவி, தனது காலில் இருந்த செருப்பை கழட்டி பேராசிரியருக்கு லெப்ட் ரைட் வாங்கினார். சக மாணவர்களும் சேர்ந்து பேராசிரியரை விரட்டி விரட்டி புரட்டி எடுத்தனர். இந்தக் காட்சிகளை வகுப்பறையில் இருந்த மாணவர் ஒருவர் செல்போனில் படம் பிடித்த நிலையில் சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கல்லூரி நிர்வாகம் இந்த விவகாரத்தில் உடனடியாக விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. பேராசிரியர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளது. மேலும், பேராசிரியர் பணியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. நெலமங்கலா கிராம போலீஸ் நிலையத்தின் எல்லைக்குட்பட்ட இந்த சம்பவம் தொடர்பாக, பாதிக்கப்பட்ட மாணவி தரப்பில் இதுவரை எந்த புகாரும் கொடுக்கப்படவில்லை. மாணவி புகார் அளித்தால் உரிய வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தப்படும் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source link