சென்னை: பெரம்பூரில் நாளை தவெக தலைவர் விஜய் பிரசாரத்துக்கு போலீசார் அனுமதி வழங்க மறுத்துள்ளனர். மாற்று இடம் கேட்டு விண்ணப்பிக்கும்படி தெரிவித்துள்ளனர்.
த.வெ.க., தலைவர் விஜய், சில மாதங்களுக்கு முன்பு வரை, பல்வேறு மாவட்டங்களில் சனிக்கிழமை தோறும் பிரசாரம் மேற்கொண்டார். கரூரில் நிகழ்ந்த கூட்ட நெரிசல் உயிர் பலி சம்பவத்துக்கு பின், அந்த பயண திட்டம் ரத்தானது. கட்சி நிர்வாகிகள் சந்திப்புகளை மட்டும் பல்வேறு நகரங்களில் மேற்கொண்டார். தற்போது, தமிழக சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், சென்னை பெரம்பூர் தொகுதியில், விஜய் போட்டியட உளளார்.
இதையடுத்து, தன் தேர்தல் பிரசாரத்தை நாளை சனிக்கிழமை காலை 10:00 மணிக்கு, பெரம்பூரில், விஜய் துவக்க இருந்தார். இதற்கு அனுமதி கேட்டு போலீசிடம் விண்ணப்பிக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில், விஜய் பிரசாரத்துக்கு போலீசார் அனுமதி மறுத்துள்ளனர். தவெக அனுமதி கேட்ட எம்கேபி நகர் பகுதியில் 3 ஆயிரம் பேர் கூட முடியாது. சிறிய இடம் என்பதால் அசம்பாவிதம் ஏற்பட வாய்ப்பு உள்ளது எனக்கூறியுள்ள போலீசார், மாற்று இடத்தில் பிரசாரம் நடத்த அனுமதி கேட்டு விண்ணப்பிக்கும்படி கூறியுள்ளனர்.
