துபாய்: ஐக்கிய அரபு எமிரேட்சில் நேற்று இரவு முதல் இன்று காலை வரை இடி மின்னலுடன் கனமழை கொட்டி தீர்த்தது. சூறாவளி காற்றும் வீசியது.
இதன் காரணமாக பல இடங்களில் தெளிவான வானிலை இல்லாததால், வாகன ஓட்டிகளுக்கு வேக கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. ஷார்ஜாவில் ஒரு சில இடங்களில், மழை நீர் தேங்கியது. இதனையடுத்து அந்த பகுதிகளுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் என மக்களுக்கு அறிவுறுத்திய அதிகாரிகள், வீட்டைவிட்டு வருவதை தவிர்க்க வேண்டும் எனக்கூறியுள்ளனர்.
புஜாரா நகர சாலைகளில் மழை நீர் தேங்கியது. அதே நேரத்தில் எந்த சாலையும் மூடப்படவில்லை. வாகன ஓட்டிகளுக்கு பாதிப்பைகுறைக்கும் வகையில், மழை நீரை அகற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர். பல வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து ஸ்தம்பித்தது.
துபாய் மற்றும் அபுதாபி இடையிலான பஸ் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டது. சாலைகளில் தண்ணீர் தேங்கியதால், தற்காலிகமாக இந்த மாற்றம் செய்யப்பட்டது. அபுதாபியிலும் வாகனங்கள் வேகமாக செல்வதற்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டு பிறகு விளக்கி கொள்ளப்பட்டது. அதேநேரத்தில் போக்குவரத்து விதிகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் எனவும் கூறியுள்ளது.
மழை காரணமாக மக்களை பாதுகாக்கும் வகையில், அவசர கால பணிகளில் ஈடுபடுவதற்காக துபாய் போலீசார் தயார் நிலையில் வைக்கப்பட்டனர்.
மின்னல் தாக்குதல்
உலகின் மிக உயரமான கட்டடமாக கருதப்படும் புர்ஜ் கலிபாவில் மின்னல் தாக்கியது. ஆனால் சேதம் ஏதுமில்லை.
எச்சரிக்கை
இதனிடையே யுஏஇ நேரப்படி இன்று இரவு வரை பெரும்பாலான இடங்களுக்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கையும் , ஒரு சில இடங்களுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. யுஏஇயில் மழை வெளுத்து வாங்கினாலும் எந்த சேதமோ, பாதிப்போ ஏற்படவில்லை.
