ஸ்டோன் பெஞ்ச் ஸ்டுடியோ பேனரில் கார்த்திகேயன் சந்தானம் மற்றும் கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில் சோமிதரன் இயக்கத்தில் நவீன் சந்திரா நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘நீளிரா’. இப்படத்தில் நவீன் சந்திரா, சனந்த், ரூபா கொடுவாயூர், கபிலா வேணு, ‘கயல்’ வின்சென்ட், விது, ரோஹித் கோகாட்டே, நவயுகா, சிது குமரேசன், ஸ்வாதி கிருஷ்ணா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கே இசையமைத்திருக்கும் இப்படம் ஏப்ரல் 3ஆம் தேதி வெளியாகவுள்ளது.
சமீபத்தில் நடந்த இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் கார்த்திக் சுப்புராஜ் ஈழம் தொடர்பாக மனம் திறந்து பேசியிருந்தார். அதாவது ஈழம் சம்பந்தமாக தனக்கு ஒரு உணர்வுப்பூர்வமான தொடர்பு உண்டு எனவும் அதை கலை வழியாக கொண்டு வர விரும்பினேன் எனவும் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் இப்படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. 1988ஆம் ஆண்டு வட இலங்கையில் நடக்கும் போர் சூழலில் ஒரு வீட்டின் திருமணம் நிகழ்வு எப்படி நடக்கிறது. அவர்கள் எந்தளவு சவால்களை எதிர்கொள்கின்றனர் என்பதை உண்மை சம்பவ அடிப்படையில் கற்பனை கலந்து இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.
ஒரு நாள் நடக்கும் கதையம்சத்தை கொண்டு உருவாகியுள்ள இப்படம் தற்போது ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. ட்ரெய்லரில் போரை நிறுத்த சொல்லி தமிழ்நாட்டின் அரசியல் கட்சிகளும் தமிழர் அமைப்புகளும் கூறுவதாக ஒரு வாய்ஸ் ஓவர் கேட்கிறது. இதனால் தமிழ்நாட்டின் அரசியல் தொடர்பான விஷயங்களும் இடம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
