விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே பாட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டு ஒருவர் உடல் சிதறி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள விஸ்வநத்தம் பகுதியில் செய்யப்பட்டு வந்த பட்டாசு ஆலையில் இன்று மாலை பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் ஒருவர் உடல் சிதறிய நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளார். மீட்கப்பட்ட சடலம் ஆணா பெண்ணா எனத் தெரியாத அளவிற்கு சேதமடைந்துள்ளது.
உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில் அங்கு வந்த சிவகாசி தீயணைப்புத் துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த விபத்தில் இரண்டு அறைகள் முழுவதும் தரைமட்டமாகி உள்ளது. தொடர்ந்து தீயணைப்புத் துறையினர் அங்கு மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இடிபாடுகளில் உள்ளே யாரும் சிக்கி இருக்கிறார்களா எனத் தேடிவருகின்றனர்.
உள்ளே பொதுமக்கள் யாரும் சென்று விடாமல் தடுக்க காவல்துறையினர் அந்தப்பகுதியில் குவிந்துள்ள பொதுமக்களை அப்புறப்படுத்தி வருகிறார்கள். உச்சநீதிமன்றத்தால் தடை செய்யப்பட்ட பட்டாசுகள் வகைகள் தயாரிப்பின் போது இந்த விபத்து நடந்ததா என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
