தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தை முடிந்து அடுத்தக்கட்ட தேர்தல் பணியை தீவிரப்படுத்தியுள்ளது.
திமுக கூட்டணியைப் பொறுத்தவரையில், இந்திய யூனியன் முஸ்லீம் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி ஆகிய கட்சிக்கு தலா 2 தொகுதிகள், மதிமுகவுக்கு 4 தொகுதிகள், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு 2 தொகுதிகள், இந்தியன் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள், காங்கிரஸுக்கு 28 தொகுதிகள், விசிகவுக்கு 8 தொகுதிகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள், தேமுதிக 10 தொகுதிகள், மனிதநேய ஜனநாயகக் கட்சி, எஸ்.டி.பி.ஐ, முக்குலத்தோர் புலிப்படை, தமிழர் தேசம் கட்சி ஆகிய கட்சிகளுக்கு தலா 1 என மொத்தம் 69 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் 11 தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்தில் மற்ற கட்சியினர் போட்டியிடவுள்ளனர். திமுக கூட்டணியில் இருக்கும் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம், இந்த தேர்தலில் போட்டியிடவில்லை என்றும் திமுக கூட்டணி கட்சிகளுக்கு ஆதரவளிப்பதாகவும் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட எண்ணிக்கையில் எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடுவது என்பது குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், இன்று (27-03-26) சென்னை அண்ணா அறிவாலயத்துக்கு வந்து முதல்வர் மு.க.ஸ்டாலினைச் சந்தித்து ஆலோசனை நடத்தினார். அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய திருமாவளவன், “பேச்சுவார்த்தை குழுவுடன் இரண்டாவது கட்டமாக இன்று நடைபெற்ற பேச்சுவார்த்தையில் விசிகவுக்கான 8 தொகுதிகளை அடையாளம் கண்டிருக்கிறோம். பேச்சுவார்த்தை குழுவின் தலைவர் டி.ஆர்.பாலுவு விசிக சார்பில் நானும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளோம். முறைப்படி கூட்டணியின் தலைவரும் திமுகவின் தலைவருமான மு.க.ஸ்டாலின் விரைவில் அறிவிப்பார். திருப்திகரமான சுமூகமான அளவில் பேச்சுவார்த்தை நடந்தது. விரும்பிய தொகுதிகள் கிடைத்துள்ளன.
அதிகாரப்பூர்வமாக என்னென்ன தொகுதிகள் என்று அறிவிக்கப்பட்ட பிறகு வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும். திமுக கூட்டணியில் கடைசி நேரத்திலாவது ஏதேனும் பிரச்சனை எழாதா? வெடிக்காதா? என்று எதிர்பார்ப்புடன் காத்திருப்பவர்கள் மீண்டும் மீண்டும் ஏமாறப் போகிறார்கள். அப்படி எந்த பிரச்சனையும் இல்லை. அவர்கள் சொல்வதை போல் இழுபறி எதுவும் இல்லை. 10க்கும் மேற்பட்ட அரசியல் கட்சிகள் ஒரு கூட்டணியில் இருக்கிற போது, தனித்தனியே ஒவ்வொரு கட்சியையும் அழைத்து பேசுகிற போது ஒரு கட்சி கேட்கிற தொகுதிகளை இன்னொரு கட்சி கேட்கும் நிலை இருக்கிற போது, இந்த தாமதம் ஏற்படத்தான் செய்யும். இதை அவர்கள் இழுபறி என்கிறார்கள். அப்படி எந்த இழுபறியும் இல்லை என்பது தான் எதார்த்தமான உண்மை. இன்று இரவு அல்லது நாளை காலை அனைத்து தொகுதிகளும் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட பின்னர் முதல்வர் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார்” என்று கூறினார்.
