திருக்கோவிலுார்: காங்கிரசும், பா.ஜ.,வும் நம் உரிமைகளை பறித்தவர்கள் என்றும், தி.மு.க.,வும், அ.தி.மு.க.,வும் உரிமைகளை பறிகொடுத்தவர்கள் என்றும், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சாடினார்.
திருக்கோவிலுார் தொகுதி நா.த.க., வேட்பாளர் ஹேமராஜனை ஆதரித்து பிரசாரம் செய்த சீமான் பேசியதாவது; காங்கிரசார், கச்சத்தீவை சிங்களர்களுக்கு தாரைவார்த்தபோது, அதிகாரத்தில் இருந்த தி.மு.க., அதை தடுக்கவில்லை. இதனால் கடலில் மீன் பிடிக்கும் உரிமையை இழந்து நிற்கிறோம். காவிரி ஆற்றில் 450 டி.எம்.சி., தண்ணீர் வந்து கொண்டிருந்தது. இன்னும் கூடுதலாக வேண்டுமென தி.மு.க., அரசு வழக்கு தொடர்ந்தது. அப்போது பிரதமராக இருந்த இந்திரா, வழக்கை திரும்ப பெற வைத்தார்.
நமக்கான உரிமையை பேசி பெற்று கொள்ளலாம் எனற நிலையில், ஒவ்வொரு ஆண்டும் போராடி போராடி பெறும் நிலைமை ஏற்பட்டுள்ளது. காங்., – பா.ஜ.., இரண்டு கட்சியும் இந்திய இறையாண்மை, தேச ஒருமைப்பாடு என்று பேசும்; அதையே தி.மு.க., வும் அ.தி.மு.க., வும் பேசும். ஆனால் காவிரி நதிநீர் என்று வரும்போது கர்நாடகாவில் இருக்கிற காங்கிரசும் பா.ஜ.,வும் அந்த மாநில கட்சியாக மாறிவிடும். அந்த மாநில மக்களின் நலனையே பேசும். ஒரு சொட்டு தண்ணீர் கூட, தமிழர்களுக்கு தர முடியாது என்று மறுத்துவிடும்.
ஆனால் அவர்கள் தான் இந்திய இறையாண்மை, தேச ஒற்றுமை, ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு, ஒரே தேர்தல் என சொல்லுவார்கள். காங்., – பா.ஜ., என இருவருமே, நம் உரிமைகளை எல்லாம் பறித்தவர்கள்; திமுகவும் அதிமுகவும் உரிமைகளை பறிகொடுத்தவர்கள். நம் உரிமைகளை பறித்தவர்களும், பறிகொடுத்தவர்களும் கூட்டு சேர்ந்து ஒவ்வொரு தேர்தலையும் சந்திக்கின்றனர். இவர்கள் எப்படி நமக்கான உரிமையை திருப்பி பெற்று தருவர்? இவ்வாறு சீமான் பேசினார்.
