“சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தார்” – இபிஎஸ்ஸை சந்தித்த பிறகு பூவை ஜெகன்மூர்த்தி!

வரும் ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெறும் தமிழக சட்டமன்றத் தேர்தலையொட்டி திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாதக, தவெக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில் அதிமுக – பா.ஜ.க அடங்கிய தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அடுத்தகட்ட தேர்தல் பணியை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அந்த கூட்டணியைப் பொறுத்தவரையில் தொகுதி பங்கீட்டின் விவரத்தை கடந்த 25ஆம் தேதி அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். அதில், பா.ஜ.க.வுக்கு 27 தொகுதிகள், பா.ம.க.வுக்கு 18 தொகுதிகள், அ.ம.மு.க.விற்கு 11 தொகுதிகள், தமிழ் மாநில காங்கிரஸுக்கு 5 தொகுதிகள், ஜான் பாண்டியனுக்கு 1 பொதுத் தொகுதி, திருமாறனின் தென்னிந்திய ஃபார்வர்டு பிளாக் கட்சிக்கு 1 தொகுதி என ஒதுக்கப்பட்டிருந்தன.

இதில் பூவை ஜெகன்மூர்த்தியின் புரட்சி பாரதம் கட்சிக்கு, கே.வி.குப்பம் என்ற ஒரு தொகுதி மட்டுமே ஒதுக்கப்பட்டிருந்தன. இதனால் பூவை ஜெகன்மூர்த்தி கடும் அதிருப்தியில் இருந்தார். இதனால் அவர் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் விலகவுள்ளார் என்று கூறப்பட்டது. இந்த சூழலில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை பூவை ஜெகன்மூர்த்தி இன்று (27-03-26) நேரில் சந்தித்துப் பேசினார். அதனை தொடர்ந்து அவர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், “எங்கள் கட்சியின் சார்பாக சில நிர்வாகிகள் கூடுதல் இடம் வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்கள். அதன் அடிப்படையில் நேற்றைய தினம் கட்சியினுடைய நிர்வாகக் குழு கூடி ஒரு சில கருத்துக்கள் கலந்துரையாடினோம். கடைசியாக முடிந்தவரை கூடுதல் தொகுதிகள் பெற முயற்சி செய்வோம், இல்லாவிட்டால் அதிமுக கூட்டணியில் நீடிக்கலாம் என்று பேசினோம்.

அந்த தீர்மானத்தின் அடிப்படையில் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்து பேசினேன். அதற்கு அவர், நாம் தான் வெற்றி பெற போகிறோம், நாம் தான் ஆட்சி அமைக்கப் போகிறோம், அதற்கு பிறகு நாம் பார்த்துக்கொள்ளலாம். எந்த விதத்திலும் புரட்சி பாரத்தை நாங்கள் கைவிட மாட்டோம் என்று ஆறுதல் சொல்லி சமாதானப்படுத்தி எங்களை அனுப்பி வைத்தார். அதே போல் எங்களுடைய தொண்டர்களும் சமாதானமாகி நாம் அந்த ஒரு தொகுதியை ஏற்றுக்கொண்டு வெற்றிக்கனியைப் பறிப்போம் என்று சொல்லி இருக்கிறார்கள். அந்த ஒரு தொகுதியிலும் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகிறோம். மீண்டும் நான் தான் கே.வி.குப்பம் தொகுதியின் வேட்பாளர்” என்று தெரிவித்துள்ளார். 

Source link