வாஷிங்டன்: ஈரான் மீதான தாக்குதலை மேலும், 10 நாட்களுக்கு நிறுத்துவதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்தாலும், மறுபுறம் ஆயிரக்கணக்கான வீரர்களை ஈரானுக்கு அனுப்பி வருதவதால், தரைவழித் தாக்குதலில் அமெரிக்கா ஈடுபட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மேற்காசிய நாடான ஈரான் அணுசக்தி திட்டங்களை செயல்படுத்தி வருவதாக குற்றஞ்சாட்டி, அமெரிக்காவும், இஸ்ரேலும் இணைந்து, பிப்., 28 முதல் தாக்குதல் நடத்தி வருகின்றன. இதில் ஈரானின் உச்ச தலைவராக இருந்த அயதுல்லா கமேனி உட்பட பல முக்கிய தலைவர்களும், தளபதிகளும் கொல்லப்பட்டனர்.
ஈரானும் பதிலடி கொடுப்பதால் அப்பிராந்தியத்தில் போர் பதற்றம் நீடிக்கிறது. அமெரிக்காவின் தாக்குதலால் ஆத்திரமடைந்த ஈரான், உலகின் 20 சதவீத கச்சா எண்ணெய் போக்குவரத்து நடக்கும் ஹார்முஸ் ஜலசந்தியை மூடியது. இதனால், நம் நாடு உட்பட உலகளவில், எரிவாயு, கச்சா எண்ணெய் உள்ளிட்டவற்றுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ஈரான் மீதான தாக்குதலை ஐந்து நாட்களுக்கு நிறுத்துவதாக சமீபத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்தார்.
இந்நிலையில், இந்த தாக்குதலை மேலும், 10 நாட்களுக்கு அதாவது ஏப்., 6 வரை நிறுத்துவதாக அதிபர் டிரம்ப் நேற்று அறிவித்தார். இது ஆச்சரியத்தை ஏற்படுத்தினாலும், ஆயிரக்கணக்கான கூடுதல் படைகளை குவிக்க, இந்த போர் நிறுத்த வாய்ப்பை அவர் பயன்படுத்துகிறாரோ என்ற சந்தேகம் ஏற்படுகிறது.
ஒருபுறம் ஈரானுடன் பேசி வருவதாக டிரம்ப் தெரிவித்தாலும், மற்றொரு புறம் ஆயிரக்கணக்கான வீரர்களை ஈரானுக்கு அனுப்பும் பணியை அமெரிக்கா மேற்கொண்டுள்ளது. இதன் வாயிலாக அமெரிக்கா தரைவழி தாக்குதலில் ஈடுபட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
அமெரிக்காவின் இத்திட்டத்தை அறிந்த ஈரான், கார்க் தீவை ஒரு கோட்டையாக மாற்றியுள்ளது-. இதன்படி, தீவை சுற்றிலும் கண்ணி வெடிகளை புதைத்துள்ளது. கூடுதல் ராணுவ வீரர்கள் மற்றும் வான் பாதுகாப்பு ஏவுகணைகள் குவிக்கப்பட்டுள்ளன. யாராவது எல்லை மீறினால், அந்த பிராந்திய நாட்டின் உட்கட்டமைப்புகள் மீது இடைவிடாத தாக்குதல் நடத்தப்படும் என ஈரான் எச்சரித்துள்ளது.
அமெரிக்காவின் திட்டம்!
அமெரிக்க அதிகாரிகளுடனான உரையாடல்களின் அடிப்படையில், ‘ஆக்சியோஸ்’ அறிக்கையின்படி, நான்கு சாத்தியமான போர் சூழல்கள் கணிக்கப்பட்டுள்ளன.
* ஈரானின் பொருளாதார வாழ்வாதாரமான கார்க் தீவை ஆக்கிரமித்து அதை கைப்பற்றுவது
* ஹார்முஸ் ஜலசந்தியின் மீதான கட்டுப்பாட்டை தீர்மானிக்கும் லாரக் தீவை கைப்பற்றுவது
* ஹார்முஸ் ஜலசந்தியின் நுழைவாயிலில் உள்ள அபு மூசா மற்றும் அதன் அருகே உள்ள இரண்டு சிறிய தீவுகளை கைப்பற்றுவது
* ஈரானின் அணுசக்தி நிலையங்களில் உள்ள அணு பொருட்களை பாதுகாக்க ஈரானுக்குள் ஊடுருவது.
