சென்னை; திமுக கூட்டணியில் அங்கம் வகுக்கும் கட்சிகள் எல்லாம் புலம்பிக்கொண்டு இருக்கின்றன. அதிமுகவுக்கு 4 நாட்கள் தான் பேசி கூட்டணியை முடிவு செய்தோம், ஆனால் திமுகவுக்கு 25 நாட்களாகியும் கூட்டணி முடியவில்லை என்று இபிஎஸ் கூறியுள்ளார்.
ஆலந்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட நங்கநல்லூரில் அவர் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது பேசியதாவது;
‘மயிலாப்பூரில் முதன் முதலாக தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினோன். நான் பேசியதில் ஸ்டாலினுக்கு தேர்தல் தோல்வி பயம் வந்துவிட்டது. என் பேச்சுக்கு மூன்று அமைச்சர்கள் ஏதேதோ வகையில் பதில் சொல்லியிருக்கிறார்கள். நாங்கள் சொன்ன கருத்திற்கு அவர்களால் பதில் சொல்ல முடியவில்லை. ஸ்டாலின் அதிர்ச்சியடைந்து இருக்கிறார். நிச்சயமாக அதிமுக தலைமையிலான கூட்டணி பெருவாரியான இடங்களில் வெல்லும், அதிமுக ஆட்சி அமைக்கும்.
நீங்கள்(ஸ்டாலினை குறிப்பிடுகிறார்) தொடர்ந்து 25 நாட்களாக தேர்தல் கூட்டணி குறித்து பேசி வருகிறீர்கள். 25 நாட்கள் பேசியும் இன்னும் முடிவு எட்டவில்லை. 4 நாட்கள் மட்டும் நாங்கள் பேசினோம். முதல் நாள் அதிமுக தலைமை அலுவலகத்திற்கு கூட்டணிக் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் வந்தார்கள். பேசினோம், உடனே, எத்தனை எத்தனை இடங்கள் என்று அப்போதே அறிவித்த கட்சி அதிமுக.
திமுக கூட்டணியில் அங்கம் வகுக்கும் கட்சிகள் எல்லாம் புலம்பிக்கொண்டு இருக்கின்றன. ஒரு கட்சியின் மூத்த தலைவர், திமுக தலைமையுடன் பேசிவிட்டு வந்து, ‘அழுதுக்கொண்டே சிரிக்கிறோம்’ என்று பேட்டி அளித்திருக்கிறார். அப்படிப்பட்ட நிலையில் திமுக தலைமையேற்று இருக்கிறது. அதுமட்டுமல்ல, விசிகவிற்கு இன்னும் எந்தெந்த தொகுதிகள் என்று இறுதி செய்யவில்லை. காங்கிரஸ் கட்சிக்கும் அறிவிக்கவில்லை.
ஆனால் ஸ்டாலின் எப்போது பார்த்தாலும் ஊடகங்களில், ‘எங்கள் கூட்டணி பலம் பொருந்திய கூட்டணி’ என்று செய்தி வெளியிடுவார். தொடர்ந்து 10 ஆண்டு காலம் எங்கள் கூட்டணியில் அங்கம் வகிக்கிறார்கள் என்று பெருமை பேசுவார். அப்படி 10 ஆண்டுகள் உங்கள் கூட்டணியில் இருந்த காரணத்தினால் தான், அவர்களுக்கு ஒரு தொகுதியைக் குறைத்து கொடுத்து இருக்கிறீர்கள்.
10 ஆண்டுகளாக கூட்டணிக் கட்சிகள் உங்களுக்கு விசுவாசமாக இருந்தார்கள், தமிழகத்தில் நடைபெற்ற பாலியல், கொலை, கொள்ளை பற்றி திமுக கூட்டணிக்கட்சிகள் பேசவே இல்லை. வாயை திறக்காமல் மெளனம் காத்தார்கள், உங்கள் ஆட்சிக்கு துணையாக நின்றார்கள், உங்கள் ஆட்சிக்காலத்தில் நாட்டில் நடைபெற்ற மக்கள் பிரச்னைகளை சட்டமன்றத்தில் கூட அவர்கள் எடுத்து வைக்கவில்லை. அப்படி இருந்தும் உங்களுடன் இருந்தவர்களுக்கு ஒரு இடம் குறைத்து கொடுத்துள்ளீர்கள்.
அண்மையில் திமுகவுடன் போய் சேர்ந்த கட்சிக்கு அதிக இடம் கொடுத்தார்கள். இது தான் திமுக. ஆனால், அதிமுக அப்படி இல்லை. தேர்தல் நேரத்தில் கூட்டணி வைப்போம், முடிந்து விட்டால் அந்தந்த கட்சி அவரவர்களின் கொள்கையில் மக்கள் பிரச்சனையை முன் வைப்பார்கள்., அது எங்கள் கூட்டணி தர்மம்.
ஒவ்வொரு கட்சியும் மக்களுக்காக பாடுபட வேண்டும் என்பதற்காக தொடங்கப்பட்ட இயக்கங்கள். மக்கள் பிரச்சனையை எடுத்துரைக்க வேண்டும் என்பது கட்சிகளின் முதன்மை நோக்கமாக இருக்கவேண்டும். ஆனால் திமுக தலைமையில் அமைக்கப்பட்ட கூட்டணிக் கட்சிகள் மக்களுடைய பிரச்னைகளை கண்டுகொள்ளவில்லை. அதனால் அந்த கூட்டணிக் கட்சிகளுக்கு மக்கள் செல்வாக்கு இல்லை. மக்கள் செல்வாக்கை இழந்து விட்டதால், அவர்களுக்கு குறைவான இடங்களை திமுக வழங்கி இருக்கிறது என்பதை அவர்கள் இப்போதாவது புரிந்து கொள்ள வேண்டும்.
இபிஎஸ் 10 தோல்விகளை கண்டு விட்டார் என்று ஸ்டாலின் பேசுகிறார். 2011 முதல் 2021 வரை . ஜெயலலிதா இருக்கும் போதும், மறைந்த பின்னும், அதிமுகவை திமுக வீழ்த்தியதாக வரலாறே கிடையாது. 2011ல் கருணாநிதி தலைமையில் திமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்து கிடைக்கவில்லை.
விலைவாசியைக் கட்டுப்படுத்த திமுக அரசு முயலவில்லை. விலைவாசியால் ஏழை நடுத்தர மக்கள் பாதிக்காமல் இருப்பதற்கு கூட்டுறவு சங்கம் மூலம் வெளி மாநிலத்தில் இருந்து மளிகைப் பொருள்களை கொள்முதல் செய்து, குறைந்த விலையில் மக்களுக்கு கொடுத்தது அதிமுக அரசு.
கொரோனா. அது எப்படிப்பட்ட காலம் என்பது உங்களுக்குத் தெரியும். மக்கள் யாரும் விதியில் நடமாடவில்லை. ஓராண்டு 11 மாத காலம் மக்கள் வீட்டிலேயே இருந்தார்கள். அந்த காலத்தில் கூட சிறப்பான ஆட்சியைக் கொடுத்தது அதிமுக. அரசாங்கத்திற்கு ஒரு ரூபாய் கூட வருமானம் கிடையாது. தொழிற்சாலைகள் திறக்கவில்லை., ஜிஎஸ்டி வரி கிடையாது, பெட்ரோல் பங்க் திறக்கவில்லை. அதிலிருந்து வருவாய் கிடைக்கவில்லை. டாஸ்மாக் மூடப்பட்டது, சாலை வரி கிடையாது, பத்திரப்பதிவு கிடையாது, வருவாய் இல்லாத நிலையிலும் சிறப்பான ஆட்சியை தந்த அரசு, அதிமுக அரசு.
வருமானமே இல்லாமல் கொரோனா காலத்தில் 40 ஆயிரம் கோடியை செலவு செய்த அரசு அதிமுக அரசு. திறமையாக செயல்பட்டு ஒரு நல்ல அரசு என்று மக்களிடம் பேர் வாங்கியது அதிமுக அரசு.
ஆனால், உங்கள் அரசு அப்படியா இருக்கிறது…? புயல் வந்ததா…? வெள்ளம் வந்ததா…?. கொரோனா வந்ததா…? எதுவுமில்லை. ஆனால் கடன் மட்டும் 5 லட்சம் கோடியாக அதிகரித்துவிட்டது. எப்போது பார்தாலும் இந்தியாவிலேயே சூப்பர் முதலமைச்சர் என்று ஸ்டாலின் பெருமை பேசி வருகிறார்.கடன் வாங்குவதில் முதல் முதலமைச்சர் என்பது உண்மை தான். இந்தியாவிலேயே கடன் வாங்குவதில் முதன் மாநிலம் தமிழ்நாடு. ஒரு பக்கம் கடன் வாங்குகிறீர்கள், அதன் மூலம் சென்னை மக்களுக்கு ஏதாவது திட்டம் வந்ததா…? தமிழ்நாட்டு மக்களுக்கு வந்ததா…?
2021 அதிமுக ஆட்சியில் இருந்த வருவாயை விட 2024-25 திமுக ஆட்சியில் வருவாய் ஒரு லட்சத்து 36 ஆயிரம் கோடி கூடுதலாக வந்துள்ளது. அப்படி இருந்தும் கடன் வாங்க வேண்டிய அவசியம் என்ன? அதாவது அத்தனையும் ஊழல். கலெக்ஷன், கமிஷன், கரப்ஷன் அது தான் திமுக ஆட்சி.
சென்னை நகரைச்சுற்றி ரிங் சாலை அதிமுக ஆட்சியில் கொண்டு வந்தோம். சுமார் 14 ஆயிரம் கோடி ரூபாய் அந்த திட்டத்திற்கு ஒதுக்கி தொடங்கிவைத்தோம். ஆனால் இன்னும் அந்த பணி நிறைவு பெறவில்லை. எல்லாம் அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்டது. ஆனால் திமுக ஆட்சியில் எந்த புதிய திட்டமும் கொண்டுவரப்படவில்லை.
இன்று திமுக ஆட்சியில் நகராட்சி, குடிநீர் வழங்கல் துறையில் நடைபெற்ற ஊழலை ஆதாரத்தோடு கண்டுபிடித்து, டிஜிபிக்கு மூன்று முறை அறிக்கை அனுப்பினார்கள். இதுவரை எஃப்.ஐ.ஆர். போடவில்லை. நீதிமன்றம் சென்று, நீதிமன்றம் உத்தரவிட்டும் இன்னும் வாய்தா வாங்கிக்கொண்டு இருக்கிறார்கள். ஊழல் செய்வதில் மன்னர்கள், நகர்ப்புற வளர்ச்சித்துறையில் பணி நியமன ஊழல், அமலாக்கத்துறை கண்டுபிடித்தது. அதிமுக ஆட்சியில் தோண்டி எடுக்கப்பட்டு சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும்.
எங்கு பார்த்தாலும் போதை பல வடிவத்தில் விற்கிறது. அதைக் கட்டுப்படுத்த முடியவில்லை. ஏனென்றால் விற்பதே திமுகவினர் தான். போதை ஆசாமிகளால் தான் மக்கள் நடமாட முடியவில்லை. சிறுமி முதல் பாட்டி வரை யாரையும் விட்டுவைப்பதில்லை. தங்க விலை நிலவரம் போல கொலை நிலவரம் தினமும் வருகிறது. இப்படிப்பட்ட ஆட்சி அகற்றப்பட வேண்டும்.
இவ்வாறு இபிஎஸ் பேசினார்.
