திமுக எம்.பி தொடர்புடைய காரில் ரூ.50 லட்சம்; அதிரடி காட்டிய தேர்தல் பறக்கும் படை!

பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் ஒரே கட்டமாக ஏப்ரல் 23ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி மார்ச் 30 ஆம் தேதியிலிருந்து தொடங்கும் வேட்புமனு தாக்கல், ஏப்ரல் 6ஆம் தேதியுடன் நிறைவு பெறவுள்ளது. ஏப்ரல் 23ஆம் தேதி பதிவாகும் வாக்குகள் மே 4ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றைய தேதியில் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளது.

இதனால் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ள நிலையில் போலீசார் மற்றும் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக பணபட்டுவாடா நடக்கிறதா?, குறிப்பிட்ட அளவிற்கு மேல் பணம் கொண்டு சென்றால் அதற்குண்டானா ஆவணங்கள் உள்ளதா? என்பது குறித்து தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், திமுக எம்.பி ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான மது ஆலைக்கு தொடர்புடைய காரில் ரூ.50 லட்சம் பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர். சென்னை சூளை கோபால் தெரு அருகே தேர்தல் பறக்கும் படையினர் இன்று சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு திமுக ஜெகத்ரட்சகன் தொடர்புடைய காரில் சோதனை செய்தனர். அதில் உரிய ஆவணமின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.50 லட்சம் பணம் இருந்ததை கண்டு அந்த பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். அதனை தொடர்ந்து அந்த கார் வேப்பேரி காவல் நிலையம் கொண்டு செல்லப்பட்டது. 

Source link