நமது நிருபர்
நாடு முழுவதும் அறிமுகப்படுத்தப்பட்ட வருடாந்திர பாஸ்டேக் பாஸ் ஆறு மாதங்களுக்குள் 50 லட்சம் பயனர்களை தாண்டி உள்ளது என மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.
இது குறித்து மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நாடு முழுவதும் அறிமுகப்படுத்தப்பட்ட வருடாந்திர பாஸ்டேக் பாஸ் ஆறு மாதங்களுக்குள் 50 லட்சம் பயனர்களை தாண்டி உள்ளது. தேசிய நெடுஞ்சாலை பயனர்களிடையே பாஸ்டேக் வருடாந்திர பாஸ் மீதான அதிகரித்து வரும் விருப்பத்தை எடுத்துரைக்கிறது.
நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் தடையற்ற பயணத்தை ஊக்குவிப்பதில், வருடாந்திர பாஸ்டேக் பாஸ் மிகுந்த வரவேற்பை பெற்று இருக்கிறது. தனியார் வாகன உரிமையாளர்களிடையே வருடாந்திர பாஸ் ஏற்றுக்கொள்ளப்பட்டதே பயனர்கள் எண்ணிக்கை அதிகரிப்பிற்கு காரணமாகும்.
நாடு முழுவதும் மொத்த வருடாந்திர பாஸ் பரிவர்த்தனைகளில் சண்டிகர் ( 14%) முதலிடத்தை பிடித்துள்ளது. தமிழகம் 12.3% பங்களிப்புடன் அடுத்த இடத்திலும், டில்லி ஒட்டுமொத்த பயன்பாட்டில் 11.5% பங்களிப்பையும் கொண்டுள்ளது. அனைத்து கார் பரிவர்த்தனைகளிலும் 28% இப்போது பாஸ்டேக் வருடாந்திர பாஸைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படுள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
வருடாந்திர பாஸ்டேக் பாஸ்?
கடந்த ஆக., 15ம் தேதி முதல் வருடாந்திர பாஸ் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த பாஸ் வாங்கிய நாளிலிருந்து ஓராண்டுக்கு செல்லுபடியாகும். அல்லது, 200 முறை டோல்கேட்டுகளை கடந்து செல்லலாம். இதில், எது அதிகமோ அதுவரை பாஸ் செல்லுபடியாகும்.வணிக நோக்கமில்லாத தனியார் வாகனங்களுக்காக, இத்திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.
