சென்னை : சட்டசபை தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை நேற்று அ.தி.மு.க., வெளியிட்டது. 127 வேட்பாளர்கள் இடம்பெற்ற அப்பட்டியலில், பெரும்பாலானோர் பழைய முகங்களாகவே உள்ளனர். 2021ம் ஆண்டு சட்டசபை தேர்தலுக்கான பட்டியலை, அப்படியே பழனிசாமி ‘ரிபீட்’ செய்து விட்டதாக விமர்சனம் எழுந்துள்ளது.
தே.ஜ., கூட்டணியில், 167 தொகுதிகளில் போட்டியிடும் அ.தி.மு.க., கடந்த 25ம் தேதி வெளியிட்ட முதல் பட்டியலில், 23 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். நேற்று இரண்டாம் கட்டமாக வெளியிடப்பட்ட பட்டியலில், 127 வேட்பாளர்களை அக்கட்சி பொதுச்செயலர் பழனிசாமி அறிவித்தார்.
அதன்படி, அ.தி. மு.க.,வில் தற்போது உள்ள 59 எம்.எல்.ஏ.,க்களில், 46 பேருக்கு மீண்டும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இருப்பினும், முன்னாள் அமைச்சரும், ஆரணி எம்.எல்.ஏ.,வுமான சேவூர் ராமசந்திரன், முன்னாள் சபாநாயகர் தனபால், மடத்துக்குளம் மகேந்திரன், மேட்டுப்பாளையம் ஏ.கே.செல்வராஜ், ஏற்காடு சித்ரா, வானுார் சக்கரபாணி…
பாப்பிரெட்டிபட்டி கோவிந்தசாமி, கள்ளக்குறிச்சி செந்தில்குமார், சங்ககிரி சுந்தரராஜன், சேலம் தெற்கு பாலசுப்ரமணியன், வீரபாண்டி ராஜா, திருப்பூர் வடக்கு விஜயகுமார், ஸ்ரீவில்லிபுத்துார் மான்ராஜ் ஆகிய, 13 ‘சிட்டிங்’ எம்.எல்.ஏ.,களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படவில்லை.
அதேபோல், 26 புதுமுகங்களுக்கு பழனிசாமி முதல்முறை போட்டியிட வாய்ப்பு வழங்கி உள்ளார். ஆனால், 124 பேர் பழைய முகங்களாகவே உள்ளனர்.
அதிலும், 2021ல் நடந்த சட்டசபை தேர்தலில் தோல்வியடைந்த, 50க்கும் மேற்பட்டோருக்கு மீண்டும் வாய்ப்பு தரப்பட்டுள்ளது. அதனால், அந்த தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை மறு வெளியீடு செய்தது போல் இருக்கிறது. குறிப்பாக, ஒன்றிய, நகர, பேரூர், பகுதி செயலர்கள் 26 பேருக்கு, ‘சீட்’ வழங்கப்பட்டு உள்ளது.
கூட்டணி கட்சிகளுக்கு போக, அ.தி.மு.க., போட்டியிடும் தொகுதிகளில், சென்னை மாவட்டத்தில் உள்ள அண்னாநகர், ஆயிரம் விளக்கு, எழும்பூர், கொளத்துார், சேப்பாக்கம், ஆர்.கே.நகர், திரு.வி.க., நகர், துறைமுகம், வேளச்சேரி, தி.நகர், விருகம்பாக்கம், வில்லிவாக்கம் ஆகிய 12 தொகுதிகளோடு திட்டக்குடி, திருச்சுழி, ஆலங்குடி, ஆலந்துார், சோழிங்கநல்லுார் ஆகிய தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள் அறிவிக்கப்படவில்லை.
இதில், துறைமுகம், வேளச்சேரி, தி.நகர் ஆகிய தொகுதிகளில் இரண்டை பா.ஜ., கேட்கிறது. அதற்கு பதில், தங்களிடமிருந்து இரண்டு தொகுதிகளை பெற்றுக் கொள்ளவும் பேச்சு நடத்துகிறது.
பேச்சில் சுமுகமான முடிவு எட்டப்படாததால், சென்னை மாவட்ட தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்படவில்லை. அதேபோல், விருதுநகர் மாவட்டத்தில் ஒரு தொகுதியை ஒதுக்க பா.ஜ., கேட்பதால், திருச்சுழியில் இன்னும் வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை.
