பெட்ரோலிய எரிபொருளுக்கு பதில் மின்சாரம் வாகன தயாரிப்பாளர்களுக்கு வலியுறுத்தல்

புதுடில்லி, மேற்காசிய போர் காரணமாக கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு வினியோக முறையில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், வாகனங்கள் மற்றும் உதிரிபாகங் களை தயாரிப்பதற்கு, எரிபொருளுக்கு பதிலாக மின்சார பயன்பாட்டை அதிகரிக்க வேண்டும் என்று, நிறுவனங்களிடம் மத்திய அரசு வலியுறுத்தி உள்ளது.

இது குறித்து மத்திய கனரக தொழில் அமைச்சகம் கடந்த மார்ச் 25 அன்று அந்நிறுவனங்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

ஈரான் போரால் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் நிலவுகிறது. எனவே, வாகன மற்றும் உதிரிபாக தொழிற்சாலைகள் பெட்ரோலிய எரிபொருட்களுக்கு பதிலாக, சாத்தியமான இடங்களில் மின்சாரத்தை பயன்படுத்த வேண்டும்.

அந்நிறுவனங்கள் முடிந்த வரை தங்களது உற்பத்தி நேரத்தை குறைக்க வேண்டும். தேவையற்ற எரிபொருள் விரயத்தை தவிர்க்க உற்பத்தி செயல் திட்டங்களை சீரமைக்க வேண்டும்.

கார் தயாரிப்பு தேவைப்படும் அலுமினியத்துக்கு போர் காரணமாக தட்டுப்பாடு ஏற்படுவதை எதிர்கொள்ள, நிறுவனங்கள் இப்போதே மறுசுழற்சி செய்யப்பட்ட அலுமினியத்தை பயன்படுத்த வேண்டும்; அல்லது மாற்று பொருட்களை பயன்படுத்த முயல வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

‘மாற்றங்கள் சாத்தியமா?’ அரசின் இந்த சுற்றறிக்கை குறித்து வாகன துறை உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், “எரிபொருளை மிச்சப்படுத்த, மத்திய அரசு கூறும் மாற்றங்களை தொழிற்சாலைகளில் செயல்படுத்த முடியுமா என்பது தெரியவில்லை. ஆனால், போர் மிக நீண்ட காலத்துக்கு நீடிக்கும் என்பதையும், அதற்காக நாம் நம்மை தயார்படுத்தி கொள்ள வேண்டும் என்பதையும் அறிய முடிகிறது,” என்றார்.

Source link