மைல்கல்லில் எழுத்துப்பிழை; திருத்தியது நெடுஞ்சாலைத்துறை

திருப்பூர்: மாநில நெடுஞ்சாலையில் உள்ள மைல்கல்லில் எழுதப்பட்டிருந்த ஊர் மற்றும் இடங்களின் பெயர், எழுத்துப்பிழையுடன் இருந்த நிலையில், ‘தினமலர்’ செய்தி எதிரொலியால் பிழை திருத்தம் செய்யப்பட்டது.

தமிழக நெடுஞ்சாலைத்துறை சார்பில், மாவட்டந்தோறும் சாலை விரிவாக்கம் மற்றும் புதுப்பிப்பு பணி நடந்து வருகிறது. இதில், திருப்பூர் மாவட்டம், பல்லடம் – தாராபுரம் இடைபட்ட மாநில நெடுஞ்சாலையில், (எஸ்.எச்.174ஏ) புதுப்பிக்கப்பட்ட மைல்கல்லில், ‘கோவை விமான நிலையம்’ என்பது, ‘கேவை’ விமான நிலையம் எனவும், ‘சோமனுார்’ என்ற ஊரின் பெயரில், ‘சேமனுார்’ எனவும் எழுதப்பட்டிருந்தது. இது, தமிழ் ஆர்வலர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது.

இதுதொடர்பான செய்தி, போட்டோவுடன், நேற்று முன்தினம் (26ம் தேதி) ‘தினமலர்’ நாளிதழில் வெளியானது. இதனால், நெடுஞ்சாலைத் துறையினர், மைல்கல்லில் பிழைத்திருத்தம் செய்வதற்குரிய ஏற்பாடுகளை செய்தனர்.

நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘மைல்கல்லில் வர்ணம் தீட்டுவது, ஊர் மற்றும் பயண துாரம் உள்ளிட்ட தகவல்களை எழுதும் பணியை தனியார் கான்ட்ராக்ட் நிறுவனத்தினர் மேற்கொள்கின்றனர்; கவனக்குறைவாக இத்தகைய தவறை செய்துவிட்டனர்; சரி செய்து விட்டோம்,’ என்றனர்.

Source link