கோவையில் போட்டியிடுகிறாரா செந்தில் பாலாஜி? 'வாட்ஸ் அப்' பதிவால் தி.மு.க.,வினர் பரபரப்பு

கோவை: கோவை தெற்கு தொகுதியை சேர்ந்த தி.மு.க., நிர்வாகிகளுக்கு முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி அனுப்பிய ‘வாட்ஸ் அப்’ பதிவால், அவரே இத்தொகுதியில் போட்டியிடுவார் என்கிற எதிர்பார்ப்பை கட்சியினர் இடையேகிளப்பி விட்டுள்ளது.

தமிழக சட்டசபை தொகுதிகள், 2008ல் மறுசீரமைப்பு செய்யப்பட்டன. அப்போது, கோவை மேற்கு தொகுதி, தெற்காக மாறியது. அதன்பின், 2011 முதல் 2021 வரை மூன்று முறை தேர்தல் நடந்து விட்டது; மூன்று முறையும் அ.தி.மு.க.,வே வென்றிருக்கிறது. மறுசீரமைப்புக்கு முன், தி.மு.க., 5 முறை வெற்றி பெற்றிருக்கிறது. இதனால், இம்முறை கூட்டணி கட்சிகளுக்கு தொகுதியை வழங்காமல், தி.மு.க.,வே போட்டியிட வேண்டுமென கட்சியினர் வலியுறுத்தினர்.

சென்னையில் நடந்த நேர்காணலில் முதல்வர் ஸ்டாலினிடம் நேருக்கு நேராகவே கூறினர். தெற்கு தொகுதிக்கான நேர்காணலில், 35 பேர் பங்கேற்றனர். அப்போது, 2021ல் தோற்றதற்கான காரணம், இப்போது ஜெயிப்பதற்கான காரணங்களை கட்சியினரிடம் முதல்வர் கேட்டிருக்கிறார்.

‘உங்களைத் தவிர வேறு யாராவது போட்டியிட்டால் என்ன செய்வீர்கள்’ என, வெளிப்படையாக அவர் கேட்டிருக்கிறார். அதற்கு, ‘உதயசூரியன் சின்னத்தில் யார் நின்றாலும் ஓகே; நாங்கள் ஒத்துழைப்பு தருவோம்’ என, கட்சியினர் கூறியிருக்கின்றனர்.

மேலும், கோவையில் உள்ள தொகுதிகளில் ஒன்றில் நீங்களே போட்டியிடுங்கள் என, செந்தில் பாலாஜியிடம் முதல்வர்கூறியிருக்கிறார்.

நேற்று முன்தினம் இரவு 10 மணிக்கு, தனது மொபைல் போனில் இருந்து கோவை தெற்கு தொகுதிக்கு உட்பட்ட வார்டு செயலாளர்களுக்கு, செந்தில் பாலாஜி ‘வாட்ஸ் அப்’பில் குறுஞ்செய்தி அனுப்பியிருக்கிறார். அதில், தனது மொபைல் எண்ணை குறிப்பிட்டு, தங்களது மொபைலில் பதிவு செய்து கொள்ளுங்கள் என பதிவிட்டிருக்கிறார். இதைப்பார்த்த கட்சியினர், அவரே போட்டியிடுகிறார் என்று பரவலாக பேச ஆரம்பித்து விட்டனர்.

கோவையில் 10 சட்டசபை தொகுதிகள் உள்ளன. மீதமுள்ள 9 தொகுதிகளின் நிர்வாகிகளுக்கு இப்பதிவு அனுப்பப்படவில்லை. தெற்கு தொகுதி நிர்வாகிகளுக்கு மட்டும் வந்திருக்கிறது. அதனால், கோவை தி.மு.க.,வினர் சுறுசுறுப்பு அடைந்தனர். இத்தகவல் கட்சியினரிடம் பரவிய பின், அப்பதிவை செந்தில்பாலாஜி அழித்து விட்டார்.

தி.மு.க., நிர்வாகிகள் சிலர் கூறுகையில், ‘கோவை தெற்கில் அ.தி.மு.க., சார்பில், அம்மன் அர்ஜுனனுக்கு வாய்ப்பு தரப்பட்டுள்ளது. அவரை எளிதாக வீழ்த்தி விடலாம் என, தி.மு.க., நிர்வாகிகள் நினைக்கின்றனர். அ.தி.மு.க., வேட்பாளர் பட்டியல் வெளியீட்டுக்கு பின், தி.மு.க., பட்டியலில் சின்ன சின்ன மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. துணை முதல்வர் உதயநிதி கோவையில் போட்டியிடலாம் என்ற பேச்சும் உலா வருகிறது’ என்றனர்.

Source link