மும்பை: நிதி நெருக்கடியால் தவித்து வரும் ‘மைக்ரோ பைனான்ஸ்’ நிறுவனங்களுக்கு உதவும் வகையில், 20,000 கோடி ரூபாய் மதிப்பிலான கடன் உத்தரவாத திட்டத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
அதிகரித்து வரும் வாராக்கடன் காரணமாக, மைக்ரோ பைனான்ஸ் எனும் நுண் நிதி நிறுவனங்களுக்கு தொடர்ந்து கடன் வழங்க வங்கிகள் தயக்கம் காட்டி வருகின்றன.
இதனால் ஏற்பட்டுள்ள நிதி தட்டுப்பாட்டை சரி செய்யும் நோக்கில், ‘நுண்நிதி நிறுவனங்களுக்கான கடன் உத்தரவாத திட்டம் 2.0’ என்ற பெயரிலான திட்டம், வரும் ஜூன் மாதம் இறுதி வரை செயல்படுத்தப்படும் என மத்திய அரசின் ‘தேசிய கடன் உத்தரவாத அறக்கட்டளை’ தெரிவித்துள்ளது.
இத்திட்டத்தின் கீழ், வங்கிகள், வங்கி சாரா நிதி நிறுவனங்கள் உள்ளிட்டவை, நுண் நிதி நிறுவனங்களுக்கு வழங்கும் கடன்களுக்கு உத்தரவாதம் வழங்க 20,000 கோடி ரூபாய் வரை பயன்படுத்தப்படும்.
மேலும், வங்கிகள் நுண்நிதி நிறுவனங்களுக்கு வழங்கும் கடன்களுக்கான வட்டி விகிதத்துக்கு ஒரு குறிப்பிட்ட உச்சவரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அதேபோல, நுண் நிதி நிறுவனங்கள் சாமானிய மக்களுக்கு வழங்கும் கடன்களுக்கான வட்டி விகிதமும், கடந்த ஆறு மாதங்களில் அவர்கள் வசூலித்த சராசரி வட்டியை விட ஒரு சதவீதம் குறைவாக இருக்க வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த கடன்களை திருப்பி செலுத்த மைக்ரோ பைனான்ஸ் நிறுவனங்களுக்கு அதிகபட்சமாக மூன்று ஆண்டுகள் கால அவகாசம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் முதல் ஓராண்டுக்கு கடனை திருப்பி செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்படும்.
மீதமுள்ள இரண்டு ஆண்டுகளில் கடனை திருப்பி செலுத்த வேண்டும். மேலும், சிறிய மற்றும் நடுத்தர அளவிலான நுண் நிதி நிறுவனங்களுக்கும் குறிப்பிட்ட சதவீத கடன்கள் கட்டாயம் சென்றடைய வேண்டும் எனவும் வங்கிகளுக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
