முத்தரையர் ஓட்டுகள் யாருக்கு?

தமிழகத்தில் திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை, கரூர், சிவகங்கை, பெரம்பலுார், அரியலுார், திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில், 30 தொகுதிகளில் வெற்றி, தோல்வியை தீர்மானிக்கும் சக்தியாக, முத்தரையர் சமூகத்தினர் உள்ளனர்.

கடந்த 1977 சட்டசபை தேர்தல் முதல் முத்தரையர் சமூகத்தினர், பெரும்பாலும் அ.தி.மு.க.,வுக்கே ஓட்டளித்து வருகின்றனர். 1989ல் அ.தி.மு.க., இரண்டாக பிளவுபட்டபோது, ஜெயலலிதாவுக்கு இச்சமூகம் பெரும் ஆதரவளித்தது. அதனால்தான், காங்கிரசை பின்னுக்குத்தள்ளி அவரால் எதிர்க்கட்சித் தலைவராக முடிந்தது.

முத்தரையர் ஓட்டுகள் அதிகம் உள்ள லால்குடியில் வெற்றி பெற முடியாது என்பதால்தான், அமைச்சர் நேரு, திருச்சி மேற்கு தொகுதிக்கு மாறினார். ஆனால், ஜெயலலிதா மறைவுக்குப் பின், பழனிசாமியின் தலைமை முத்தரையர் சமூகத்தை ஈர்க்கவில்லை. அதனால் இச்சமூக ஓட்டுகளை, அ.தி.மு.க.,வால் தக்க வைக்க முடியவில்லை.

இதன் விளைவாக, 2021 சட்டசபை தேர்தலில், முத்தரையர் சமூகம் பெரும்பான்மையாக உள்ள தொகுதிகளில் ஒன்றில் கூட, அ.தி.மு.க., கூட்டணி வெற்றி பெறவில்லை. தொடர்ந்து, அதே ஆண்டு தேர்தலில், இச்சமூக ஓட்டுகள், பெரும்பான்மையாக தி.மு.க., பக்கம் விழுந்தன.

முத்தரையர் சமூகத்தில் உள்ள பல அமைப்புகளில் ஓரளவு வலுவாக இருக்கும், தமிழர் தேசம் என்ற கட்சியை நடத்தி வரும், வீர முத்தரையர் முன்னேற்ற சங்கத்தின் தலைவர் செல்வகுமாருக்கு ஒரு தொகுதியை, தி.மு.க., ஒதுக்கியுள்ளது.

கடந்த தேர்தலை போல திருச்சி, கரூர், பெரம்பலுார், அரியலுார் மாவட்டங்களில் மொத்த தொகுதிகளையும் அள்ளவே, முத்தரையர் சங்கத்தை கூட்டணியில் சேர்த்துள்ளதாக, தி.மு.க.,வினர் கூறுகின்றனர்.

இதை ஈடுகட்ட, தமிழ்நாடு முத்தரையர் முன்னேற்ற சங்கத்தின் தலைவரும், சிங்கத் தமிழர் முன்னேற்றக் கழகத்தின் தலைவருமான பரதனுக்கு, அ.தி.மு.க., ஒரு தொகுதியை ஒதுக்கியுள்ளது. அவர் முத்தரையர் சமூகத்தினர் அதிகம் உள்ள மண்ணச்சநல்லுார் தொகுதியில் போட்டியிடுகிறார்.

இரு கூட்டணியிலும் முத்தரையர் சங்கங்கள் இருப்பதால், அச்சமூகத்தின் ஆதரவு யாருக்கு கிடைக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது. முத்தரையர் சமூகத்தைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன், த.வெ.க.,வில் சேர்ந்துள்ளார். முத்தரையர் பெரும்பான்மை தொகுதிகளில், அவர் த.வெ.க.,வுக்கு ஆதரவு திரட்டி வருகிறார்.

Source link