உட்பிராகாரத்தின் வடக்கு மூலையில் நடராஜர் சந்நிதி அமைந்துள்ளது. இங்கு இரண்டு நடராஜ மூர்த்தங்கள் உள்ளன. சிவகாமி அம்மையும் மாணிக்கவாசகரும் உடன் அருள்பாலிக்கிறார்கள். நடராஜ மூர்த்திகளில் ஒருவர் முயலகனை மிதித்த திருக்கோலத்திலும், மற்றொருவர் முயலகன் இன்றியும் காட்சி கொடுப்பது விசேஷம்.
மேலும் பிராகாரத்தில் விசுவநாதர், விநாயகர், சுப்ரமணியர், சோமாஸ்கந்தர், கஜலட்சுமி சனீஸ்வரர், சண்டிகேஸ்வரர், ஜேஷ்டாதேவி, நால்வர், அறுபத்துமூவர், சேக்கிழார் ஆகியோரையும் தரிசிக்கலாம்.

இத்தலம் வரும் பக்தர்கள், அதிகாலையில் இங்கு கடம்பவனேஸ்வரரை வழிபட்டு மதியம் ஐயர் மலையில் சொக்கநாதரை தரிசனம் செய்து மாலையில் ஈங்கோய் மலை சென்று திருஈங்கோய் நாதரை வணங்க வேண்டும் என்பார்கள். அவ்வாறு மூன்று ஈசரையும் ஒரே நாளில் தரிசனம் செய்தால் முக்திப்பேறு கிட்டும் என்பது நம்பிக்கை.
மேலும், தேவசன்மர் என்ற மகரிஷிக்கு சுவாமி திருமணக் கோலம் காட்டி அருளிய தால் இது திருமணத் தலமாகவும் கருதப் படுகிறது. இங்கு வந்து சுவாமிக்கு மாலை சாத்தி வழிபாடு செய்துகொண்டால் விரைவில் திருமண யோகம் கைகூடும். மேலும் தொடர்ந்து 11 வாரம் திங்கட்கிழமைகளில் இங்கு வந்து தீபமேற்றி வழிபட்டு சுவாமிக்கு பஞ்சமுக அர்ச்சனை செய்தால் சகலவிதமான பாவங்களில் இருந்தும் விமோசனம் அடையலாம். வாழ்வில் நல்ல மாற்றங்கள் உண்டாகும் என்கிறார்கள் பக்தர்கள்.
