4 ஐ.பி.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம்

தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வரும் ஏப்ரல் மாதம் 23ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்று இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பின்படி மார்ச் 30 ஆம் தேதி தொடங்கும் வேட்புமனு தாக்கல், ஏப்ரல் 6ஆம் தேதியுடன் நிறைவு பெறவுள்ளது. ஏப்ரல் 23ஆம் தேதி பதிவாகும் வாக்குகள் மே 4ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றைய தினம் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன. 

இத்தகைய சூழலில் தான் சட்டப்பேரவை தேர்தல் முன்னேற்பாடுகளை இந்தியத் தேர்தல் ஆணையம் ஆய்வு செய்தது. அதன் அடிப்படையில், தமிழகத்தில் நான்கு ஐபிஎஸ் அதிகாரிகளை உடனடியாக பணியிட மாற்றம் செய்து இந்தியத் தேர்தல் ஆணையம் நேற்று (27.03.2026) உத்தரவிட்டது. அதன்படி, சென்னை சிபிசிஐடி மெட்ரோ மண்டல  காவல் கண்காணிப்பாளராக இருந்த ஜி. ஜவஹர் காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளராகவும், சென்னை அமலாக்கப்பிரிவு கண்காணிப்பாளராக இருந்த கே. பிரபாகர் பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். 

அதேபோன்று, சென்னை ‘கியூ’ பிரிவு சிஐடி கண்காணிப்பாளராக இருந்த இ. சுந்தரவதனம் தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராகவும், ல், சென்னை லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்புப் பிரிவின் (தெற்கு மண்டலம்) கண்காணிப்பாளராக இருந்த ஜி.எஸ்.ஏ மயில்வாகனன் தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளராகவும் பணியமர்த்தப்பட்டனர். இந்த உத்தரவுகளை உடனடியாக அமல்படுத்தி, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பணியில் இணைந்தது குறித்த அறிக்கையை இன்று (28.03. 2026) காலை 11:00 மணிக்குள் சமர்ப்பிக்குமாறு தமிழக தலைமைச் செயலாளருக்குத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. 

மேலும், தற்போது மாற்றப்பட்ட அதிகாரிகள் தேர்தல் முடியும் வரை தேர்தல் தொடர்பான வேறு எந்தப் பணிகளிலும் ஈடுபடுத்தப்படக் கூடாது என்றும் அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில் தேர்தல் ஆணையத்தின் கடிதத்தை மேற்கோள் காட்டி, நான்கு ஐபிஎஸ் அதிகாரிகள் உடனடியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். இதற்கான ஆணையை அரசின் கூடுதல் (உள்துறை) தலைமைச் செயலாளர் தீரஜ் குமார் வெளியிட்டுள்ளார். இந்த உத்தரவுகள் அனைத்தும் உடனடியாக அமலுக்கு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source link