துாக்கத்தை தொலைக்க போகும் தங்கமணி!

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் தொகுதி, அ.தி.மு.க., வேட்பாளராக, ‘சிட்டிங்’ எம்.எல்.ஏ., தங்கமணி அறிவிக்கப்பட்டுள்ளார். அவர் இந்த தொகுதியில், நான்காவது முறையாக போட்டியிடுகிறார். 2006 – 11 வரை திருச்செங்கோடு தொகுதி எம்.எல்.ஏ.,வாகவும், 2011, 2016, 2021 என, தொடர்ந்து மூன்று முறை குமாரபாளையம் தொகுதி எம்.எல்.ஏ.,வாகவும் உள்ளார். 2011 முதல் 2021 வரை, பத்தாண்டு காலம் அமைச்சராக இருந்துள்ளார். அ.தி.மு.க.,வின் அமைப்பு செயலராகவும் மாவட்ட செயலராகவும் உள்ளார்.

தொகுதியில் தேர்தல் வேலைகளை துவங்கி உள்ள தங்கமணி, இந்த முறை கடுமையான போட்டியை சந்திக்கும் நிலையில் உள்ளார். கடந்த 2021 தேர்தலில், ஆனங்கூர் ரயில்வேகேட் குறுக்கே பாலம் கட்டித்தரப்படும் என வாக்குறுதி அளித்தார். அவர் வெற்றி பெற்றபோதும், ஆட்சி மாற்றம் காரணமாக அந்த திட்டம் ஆய்வோடு நின்றது. எனவே, அப்பகுதியில் அடிக்கடி நிலவும் போக்குவரத்து நெரிசல் காரணமாக, மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.

தொகுதியில் சாயப்பட்டறைகள் அதிகம் உள்ளதால், 200 கோடி ரூபாயில் பொது சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் திட்டம் அறிவிக்கப்பட்டது. அதற்கான இடம் தேர்வில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. தற்போது, பல்லக்காபாளையத்தில் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. ஆனால், திட்டம் துவங்கியபாடில்லை. அதுமட்டுமின்றி குமாரபாளையம் தாலுகா அலுவலகம், காவேரி பழைய பாலம் பகுதிக்கு மாற்றப்பட்டது, தொகுதி மக்களை அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது.

இதற்கிடையே, தி.மு.க., மண்டல பொறுப்பாளராக உள்ள முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, இந்த தேர்தலில், எப்படியும் தங்கமணியை வீழ்த்த வேண்டுமென கங்கணம் கட்டிக்கொண்டு களமாடி வருகிறார்.

தி.மு.க., வேட்பாளராக, பணபலம் மிக்கவரும், தொகுதி மக்களுக்கு நன்கு அறிமுகமானவருமான பள்ளிப்பாளையம் தி.மு.க., முன்னாள் ஒன்றிய தலைவர் பாலுவை களமிறக்க திட்டமிட்டுள்ளார். இதனால், கடும் போட்டி ஏற்படும் நிலை உருவாகி உள்ளது. இருதரப்பும் பணத்தை வாரி இறைக்க தயாராகி உள்ளதால், தொகுதி வாக்காளர்களுக்கு ‘ஜாக்பாட்’ காத்திருக்கிறது.

இவர்கள் தவிர, த.வெ.க., சார்பில் குமாரபாளையத்தில் போட்டியிட, 2006ல் திருச்செங்கோடு தொகுதியில், தே.மு.திக., சார்பில் போட்டியிட்ட பொங்கியண்ணனும், த.வெ.க., மாநில துணை பொதுச்செயலராக உள்ள விஜயலட்சுமியும் காய் நகர்த்தி வருகின்றனர்.

இவர்களும் கணிசமான ஓட்டுகளை பிரிக்க வாய்ப்புள்ளதால், ‘சிட்டிங்’ எம்.எல்.ஏ.,வான தங்கமணி, இந்த முறை வெற்றிக்கனியைப் பறிக்க துாக்கத்தை தொலைத்து உழைக்க வேண்டியிருக்கும் என்கின்றனர்.

Source link