அமராவதி: ஸ்ரீராம நவமி விழாவை யொட்டி நேற்று திருமலையில் உள்ள ஏழுமலையான் கோயிலில் சீதா தேவி, லட்சுமணர், அனுமன் சமேத ஸ்ரீராமருக்கு சிறப்பு திருமஞ்சன நிகழ்ச்சிகள் நடந்தன.
கடப்பா மாவட்டத்தில் திருமலை திருப்பதி தேவஸ்தான பராமரிப்பில் உள்ள ஸ்ரீ ஒண்டிமிட்டா கோதண்டராமர் திருக்கோயிலில் நேற்று ராம நவமி பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. உற்சவ மூர்த்திகள் சிறப்பு திருமஞ்சன சேவைக்கு பிறகு மேள தாளங்கள் முழங்க பிரம்மோற்சவ கொடியேற்றம் மிகச் சிறப்பாக நடைபெற்றது. வரும் ஏப்ரல் 1-ம் தேதி இக்கோயிலில் ஸ்ரீராமர் திருக்கல்யாண நிகழ்ச்சி மிக பிரம்மாண்டமாக நடத்தப்பட உள்ளது. இதில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கலந்து கொண்டு மாநில அரசு சார்பில் சுவாமிக்கு பட்டு வஸ்திரம், சீர்வரிசைகள் வழங்க உள்ளார்.
