கருணாசுக்கு கடும் எதிர்ப்பு; நாறடிக்கும் போஸ்டர்

தி.மு.க., கூட்டணி சார்பில் சிவகங்கை மாவட்டத்தில் நான்கு தொகுதிகளில் திருப்புத்துார், மானாமதுரை – தனி ஆகிய இரு தொகுதிகளில் தி.மு.க., நேரடியாக களம் காண்கிறது. சிவகங்கை தொகுதி, முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாசுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

இங்கு, அ.தி.மு.க., சார்பில் செந்தில்நாதன் எம்.எல்.ஏ., மீண்டும் போட்டியிட உள்ளார். இவரை எதிர்த்து நிற்க, பணபலம் படைத்த காங்., மாநில பொதுச்செயலர் ஒருவருக்கு வாய்ப்பு கிடைத்தால் சரியான போட்டியாக இருக்கும் என எதிர்பார்த்திருந்தனர். ஆனால், தி.மு.க., தலைமை கருணாஸ் தொகுதியை கட்சிக்கு ஒதுக்கியுள்ளது.

கடந்த 2016ல் அ.தி.மு.க.,வில் இணைந்த கருணாஸ், முன்னாள் முதல்வர் ஜெ., ஆசியால் திருவாடானை தொகுதியில் வெற்றி பெற்றார். பின் தொகுதி பக்கமே தலைகாட்டாமல் மக்களின் அதிருப்திக்கு உள்ளானார். தற்போது, தி.மு.க., கூட்டணியில் சிவகங்கையில் நிற்கிறார்.

இது அவருக்கு மட்டுமின்றி, தி.மு.க.,விற்கே பின்னடைவை ஏற்படுத்தும் என கொந்தளிக்கின்றனர் தி.மு.க.,வினர்.

சிவகங்கை தி.மு.க.,வினர் கூறியதாவது: சிவகங்கையை தி.மு.க.,விற்கு ஒதுக் க கோரி, கட்சியினர் 30க்கும் மேற்பட்டோர் விருப்பமனு அளித்தோம். ஆனால், எங்களுக்கு வாய்ப்பு தராமல் கருணாசுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. 2016ல் திருவாடானையில் இவரது நடவடிக்கை சரியில்லாததால், அத்தொகுதி மக்கள் கடும் அதிருப்தி அடைந்தனர். அதே நிலை தான், அவரை வெற்றி பெற வைத்தால் சிவகங்கைக்கும் ஏற்படும். எனவே சிவகங்கையில் கருணாஸ் வெற்றிக்கு பாடுபடப்போவதில்லை. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

இதனிடையே முக்குலத்தோர் பாதுகாப்பு படை என்ற பெயரில் சிவகங்கை நகர் முழுதும் கருணாசுக்கு எதிராக போஸ்டர் ஒட்டப்பட்டுள் ளது.

Source link