காத்மாண்டு: நேபாளத்தில் கடந்த ஆண்டு நடந்த இளைஞர்கள் போராட்ட அடக்குமுறை தொடர்பாக, முன்னாள் பிரதமர் கே.பி. சர்மா ஒலி கைது செய்யப்பட்டார்.
நம் அண்டை நாடான நேபாளத்தில், சமூக ஊடகங்களுக்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிர்ப்பு தெரிவித்து, கடந்தாண்டு செப்டம்பர் 8ம் தேதி, இளம் தலை முறையினர் பார்லிமென்டை நோக்கி பேரணி மற்றும் ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டனர். இந்த போராட்டங்கள் நாடு முழுவதும் பரவி வன்முறையாக வெடித்தது.
இதையடுத்து போராட்டக்காரர்களுக்கும், பாதுகாப்பு படை வீரர்களுக்கும் மோதல் ஏற்பட்டதைத் தொடர்ந்து, கூட்டத்தை கலைக்க பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இரண்டு நாட்கள் நடந்த போராட் டத்தில் 76 பேர் வரை கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகின. இந்த சம்பவத்தையடுத்து, அந்நாட்டின் பிரதமராக இருந்த கே.பி.சர்மா ஒலி தன் பதவியை ராஜினாமா செய்ததுடன், தன் அரசையும் கலைத்தார்.
இப்போராட்டங்களின் போது துப்பாக்கிச் சூடு மற்றும் வன்முறையால் ஏற்பட்ட இறப்புகளுக்கு காரணமாக இருந்ததாக, முன்னாள் பிரதமர் சர்மா ஒலி உள்ளிட்டோர் மீது எப்.ஐ.ஆர்., பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். போராட்டங்கள் குறித்து விசாரிக்க ஏற்கனவே நீதிபதி கவுரி பகதுார் கார்கி தலைமையில் உயர்மட்ட விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்த எப்.ஐ.ஆர்., அறிக்கையை அக்குழுவின் விசாரணைக்கு போலீசார் அனுப்பி இருந்தனர். இந்நிலையில் இன்று (மார்ச் 28) இளைஞர்கள் போராட்ட அடக்குமுறை தொடர்பாக, முன்னாள் பிரதமர் கே.பி. சர்மா ஒலி கைது மற்றும் முன்னாள் உள்துறை அமைச்சர் ரமேஷ் லேகாக் கைது செய்யப்பட்டனர்.
பக்தபூரில் அமைந்துள்ள அவரது இல்லத்திலிருந்து நேபாள போலீசாரால் அழைத்து செல்லப்படுவதும், மருத்துவப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படும் வீடியோ காட்சியும் வெளியாகி உள்ளது. 47வது பிரதமராக, ‘ராப்’ பாடகரும், காத்மாண்டு முன்னாள் மேயருமான பாலேந்திர ஷா, 35, நேற்று பதவியேற்ற நிலையில் இன்று நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
