நேபாளத்தில் அமைந்தது புதிய ஆட்சி; பிரதமரானார் ராப் பாடகர்

அண்டை நாடான நேபாளத்தில், கடந்த ஆண்டு மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் போராட்டத்தால் நாடு நிலைகுலைந்து போனது. சாதாரண போராட்டம், பின்பு வன்முறை களமாக மாறியது. இதனால், நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். நிலைமை கட்டுக்கடங்காமல் போனதை அடுத்து பிரதமர் கே.பி. சர்மா ஒலி பதவி விலகினார். இதையடுத்து, கடந்த செப்டம்பர் மாதம் நாட்டின் இடைக்கால பிரதமராக சுசிலா கார்கி நியமிக்கப்பட்டார். சில மாதங்கள் அவர் நேபாளத்தின் பிரதமராகச் செயல்பட்டு வந்தார்.   

இந்நிலையில், கடந்த மார்ச் 5 அன்று அந்நாட்டில் புதிய அரசைத் தேர்ந்தெடுப்பதற்கான பொதுத் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் ராஷ்டிரிய சுதந்திரா கட்சி வெற்றி பெற்றது. இதையடுத்து, ராஷ்டிரிய சுதந்திரா கட்சியைச் சேர்ந்த பாலேந்திர ஷா, நேற்று (27.03.2026) அந்நாட்டின் புதிய பிரதமராகப் பதவியேற்றார். ராப் இசைப்பாடகரான இவர், முன்பாக மேயராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.  நேபாளத்தின் இளம் வயது பிரதமர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

பிரதமராகப் பதவியேற்றுள்ள இவருக்கு இந்தியப் பிரதமர் மோடி எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். அதில், “நேபாளத்தில் பிரதமராகப் பதவியேற்றுள்ள பாலேந்திரா ஷாவுக்கு வாழ்த்துக்கள். தேர்தலில் வெற்றி பெற்று நீங்கள் பிரதமராகப் பதவி ஏற்று இருப்பது, நேபாள மக்கள் உங்கள் மீது வைத்துள்ள நம்பிக்கையை வெளிப்படுத்துகிறது. நம் இரு நாட்டு மக்களின் நன்மைக்காக, இந்திய -நேபாள நட்புறவை மேம்படுத்துவோம்” என்று தெரிவித்துள்ளார்.

Source link