சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் சுந்தர் சி; வெளியான அறிவிப்பு!

2026 சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள அனைத்து கட்சிகளும் தங்களது பணிகளைத் தீவிரப்படுத்தி வருகின்றனர். தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக ஏப்ரல் 23ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற வாக்கு எண்ணிக்கை மே 4ஆம் தேதி நடைபெறுகிறது. தமிழ்நாட்டில் பிரதான கட்சிகளான திமுக-வும் அதிமுக-வும் தங்களது கூட்டணிக் கட்சிகளுடன் கூட்டணி பங்கீட்டை முடித்து பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளனர். 

இதில் தேசிய ஜனநாயக கூட்டணியில் களம் காணும் அதிமுக, முதல் கட்சியாக தங்களது கட்சிகளின் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதுவரை இரண்டு கட்ட வேட்பாளர்களை அறிவித்த அக்கட்சி விரைவில் அடுத்த கட்ட வேட்பாளர்களை அறிவிக்கவுள்ளது. இக்கூட்டணியில் மொத்தம் பாஜக, பாமக, அமமுக, தமாக, ஐஜேகே, தமமுக, புரட்சி பாரதம், புதிய நீதிக்கட்சி உள்ளிட்ட இன்னும் சில கட்சிகள் போட்டியிடுகின்றன. 

இக்கூட்டணியில் ஏ.சி.சண்முகத்தின் புதிய நீதிக்கட்சிக்கு இரண்டு தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. அதாவது அதிமுக சார்பில் ஒரு தொகுதியும் பாஜக-வுக்குக் ஒதுக்கப்பட்ட ஒரு தொகுதியும் ஒதுக்கப்பட்டிருந்தது. இது குறித்து பேசிய ஏ.சி.சண்முகம், தாய் வீட்டுச் சீதனமாக அதிமுக ஒரு தொகுதியும், புகுந்த வீடான பாஜக ஒரு தொகுதியும் ஒதுக்கியுள்ளதாகத் தெரிவித்திருந்தார். மேலும் அதிமுக ஒதுக்கிய தொகுதியில் இரட்டை இலை சின்னத்திலும், பாஜக ஒதுக்கவுள்ள தொகுதியில் தாமரை சின்னத்திலும் போட்டியிடுவதாக அறிவித்தார். 

இந்த நிலையில் அதிமுக சார்பில் ஒதுக்கப்பட்ட மதுரை மத்திய தொகுதி வேட்பாளரை ஏ.சி.சண்முகம் அறிவித்துள்ளார். அத்தொகுதியில் திரைப்பட இயக்குநர் மற்றும் நடிகர் சுந்தர் சி போட்டியிடுவதாக அறிவித்துள்ளார். மேலும் இன்னொரு தொகுதி வேட்பாளரை வரும் 30ஆம் தேதி அறிவிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார். பாஜக சார்பில் இன்னும் இவருக்கு என்ன தொகுதி என்பதை ஒதுக்கவில்லை. அதையும் வேட்பாளர் அறிவிக்கும் தினம் வெளியிடுவதாகத் தெரிவித்துள்ளார். 

இயக்குநர் சுந்தர் சி, ஏ.சி.சண்முகத்தின் படத் தயாரிப்பு நிறுவனமான ‘பென்ஸ் மீடியா’ நிறுவனத்துடன் ‘அரண்மனை 3’, ‘அரண்மனை 4’, மற்றும் ‘கேங்கர்ஸ்’ படத்தைத் தயாரித்துள்ளார். மேலும் அதில் இயக்கி நடித்தும் உள்ளார். அதே போல் ஏ.சி. சண்முகம் இதுவரை தயாரித்த 5 படங்களுமே சுந்தர் சியின் படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அப்படங்கள் அரண்மனை , காஃபி வித் காதல், அரண்மனை 4, மதகஜராஜா, கேங்கர்ஸ் ஆகும். இதனிடையே 2024 நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் வேலூர் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட ஏசி சண்முகத்துக்கு சுந்தர் சி வாக்கு சேகரித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.  

Source link