புதுடில்லி: டில்லி சென்ற இண்டிகோ விமானத்தின் இன்ஜின் பழுதடைந்ததால் அங்கு அவசரமாக தரையிறக்கப்பட்டது. இதனால், டில்லி விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
ஆந்திராவின் விசாகப்பட்டினத்தில் இருந்து டில்லிக்கு இண்டிகோ நிறுவனத்துக்கு சொந்தமான போயிங்737 ரகத்தை சேர்ந்த 6E 579 விமானம் 161 பயணிகளுடன் கிளம்பியது. விமானம் டில்லியை நெருங்கிய நிலையில், இன்ஜின் பழுதடைந்தது. இது குறித்து உடனடியாக விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு விமானி தகவல் தெரிவித்தார்.
உடனடியாக விமான நிலையம் உஷார்படுத்தப்பட்டு,தீயணைப்பு வாகனங்கள் தயாராக வைக்கப்பட்டன. பிறகு, அந்த விமானம் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. பயணிகள் அனைவரும், பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். யாருக்கும் பாதிப்பு ஏற்பட்டதாக தகவல் இல்லை.
இது குறித்து இண்டிகோ நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: விமானம் தரையிறங்குவதற்கு முன்னர் தொழில்நுட்ப பிரச்னை கண்டறியப்பட்டது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அனுமதி வாங்கி விமானம் உடனடியாக தரையிறக்கப்பட்டது. சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த விமானம் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. பயணிகள் மற்றும் ஊழியர்களுக்கான பாதுகாப்புக்கு உயர் முன்னுரிமை அளித்து வருகிறோம். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
துருக்கியின் கோரியன்டன் விமான நிறுவனத்தின் விமானங்களை, இண்டிகோ நிறுவனம் குறுகிய காலத்துக்கு குத்தகைக்கு எடுத்துள்ளது. அவ்வாறு வாங்கப்பட்ட 5 விமானங்களில் ஒன்றில் தான் இன்று இன்ஜின் கோளாறு ஏற்பட்டுள்ளது.
