கோல்கட்டா: மேற்கு வங்கம் அராஜகத்தால் பாதிக்கப்பட்டுள்ளது என தேர்தலுக்கு முன்னதாக திரிணமுல் காங்கிரசுக்கு எதிராக குற்றப்பத்திரிகை வெளியிட்டு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா குற்றம் சாட்டியுள்ளார்.
மேற்குவங்க மாநிலம் கோல்கட்டாவில் மம்தா அரசுக்கு எதிராக ஒரு குற்றப்பத்திரிகையை வெளியிட்டு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியதாவது: மேற்குவங்கத்தில் ஊடுருவல்காரர்கள் நாட்டிற்குள் நுழைந்து, தேசியப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் விளைவிக்கும் ஒரே ஒரு வழி மட்டுமே தற்போது எஞ்சியுள்ளது. கடந்த 15 ஆண்டுகளாக லஞ்சம், ரவுடிகள் அட்டகாசம் என மக்கள் கடும் அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மம்தா ஆட்சியின் லட்சணம் தற்போது வெளிப்பட்டுள்ளது. வரும் தேர்தல் முடிவில் நல்ல மெஜாரிட்டியுடன் பாஜ., ஆட்சிக்கு வரும். நாங்கள் வந்தால் நல்ல நிர்வாகத்தை தருவோம். எனவே மேற்குவங்க தேர்தலானது பல வகைகளிலும் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகும். திரிணமுல் காங்கிரஸ் ஆட்சியின் மீது மக்களுக்கு உள்ள குறைகளுக்குக் குரல் கொடுக்க பாஜ உறுதியேற்றுள்ளது.
15 ஆண்டு கால…
தற்போது நாடெங்கும் பரவி வரும் விரைவான முன்னேற்றம் மற்றும் வளர்ச்சியின் வேகத்துடன் மேற்குவங்கமும் தன்னை இணைத்துக்கொள்ள வேண்டும். நம்பிக்கையையும், அச்சத்தின் பிடியிலிருந்து விடுதலையையும் அடிப்படையாகக் கொண்ட ஒரு பயணமாக இது அமையும். அந்தத் தீர்க்கமான முடிவை எடுப்பதற்கான வாய்ப்பாகவே இந்தத் தேர்தல் அமைந்துள்ளது. திரிணமுல் காங்கிரஸ் அரசின் 15 ஆண்டுகால ஆட்சியில் இருந்த முக்கியப் பிரச்னைகளை இந்தக் குற்றப்பத்திரிகை எடுத்துக்காட்டுகிறது.
பாதிப்பு
திரிணமுல் காங்கிரஸ் இதை ஒரு பாஜ ஆவணம் என்று நிராகரிக்கக்கூடும் என்றாலும், இது உண்மையில் மேற்குவங்க மக்களின் கவலைகளைப் பிரதிபலிக்கிறது. மேற்கு வங்கம் அராஜகத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. திரிணமுல் காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் மக்களை துன்புறுத்துகின்றனர். வரவிருக்கும் மேற்கு வங்க மாநில தேர்தல் மாநிலத்திற்கு மட்டுமல்ல நாட்டிற்கும் முக்கியமானவை. திரிணமுல் காங்கிரஸின் ஆட்சியில் மாநிலம் பொருளாதார ரீதியாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அமித்ஷா பேசினார்.
