தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வரும் ஏப்ரல் மாதம் 23ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்று இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பின்படி மார்ச் 30 ஆம் தேதி தொடங்கும் வேட்புமனு தாக்கல், ஏப்ரல் 6ஆம் தேதியுடன் நிறைவு பெறவுள்ளது. ஏப்ரல் 23ஆம் தேதி பதிவாகும் வாக்குகள் மே 4ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றைய தினம் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.
இந்நிலையில் திமுக வேட்பாளர் பட்டியலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். அதன்படி கன்னியாகுமரி மகேஷ், நாகர்கோவில் ஆஸ்டீன், ராதாபுரம் அப்பாவு, தென்காசி வி. ராஜா, கோவில்பட்டி கருணாநிதி, திருச்செந்தூர் அனிதா ராதாகிருஷ்ணன், திருநெல்வேலி சுப்ரமணியன், தூத்துக்குடி கீதா ஜீவன் ஆகியோர் போட்டியிடுகின்றனர். விராலிமலை செல்லபாண்டியன், பட்டுக்கோட்டை அண்ணாதுரை, ஒரத்தநாடு வைத்திலிங்கம், திருவையாறு துரை சந்திரசேகரன் திருவண்ணாமலை எ.வ. வேலு, காங்கேயம் சாமிநாதன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
அருப்புக்கோட்டை கே.கே. எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், முதுகுளத்தூர் ராஜகண்ணப்பன், ராஜாபாளையம் தங்கப் பாண்டியன், மதுரை மத்தி பழனிவேல் தியாகராஜன், திருமயம் ரகுபதி திருப்பத்தூர் கே.ஆர். பெரியகருப்பன், சேப்பாக்கம் உதயநிதி ஸ்டாலின், ஆயிரம் விளக்கு எழிலன், துறைமுகம் சேகர்பாபு கொளத்தூர் மு.க. ஸ்டாலின் உள்ளிடோர் போட்டியிடுகின்றனர். மேலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறுகையில், “மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி அரசியல் கூட்டணி மட்டுமல்ல கொள்கை கூட்டணி ஆகும். 164 தொகுதிகளில் திமுக நேரடியாக களம் காண்கிறது. 70 தொகுதிகளை கூட்டணிக் கட்சிகளுடன் பகிர்ந்து கொண்டுள்ளோம். 175 தொகுதிகளில் உதயசூரியன் சின்னமும், 59 தொகுதிகளில் கூட்டணிக் கட்சிகளின் சின்னமும் போட்டியிடுகின்றன” எனத் தெரிவித்தார்.
