திமுக அமைச்சர்களுக்கு வாய்ப்பு மறுப்பு; அதிரடியாக வெளியான வேட்பாளர் பட்டியல்!

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி பங்கீட்டை நிறைவு செய்து தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், இன்று (28-03-26) 164 தொகுதிகளில் நேரடியாக போட்டியிடும் திமுக வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார். அதன்படி, புதுமுகம் 60 பேருக்கு மேல் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. 

இதில், அமைச்சர்கள் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு திருச்செந்தூர் தொகுதி, கீதா ஜீவனுக்கு தூத்துக்குடி தொகுதி, ராஜகண்ணப்பனுக்கு முதுகுளத்தூர் தொகுதி, தங்கம் தென்னரசுக்கு திருச்சுழி தொகுதி, கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரனுக்கு அருப்புக்கோட்டை, பி.டி.ஆர் பழனிவேலுக்கு மதுரை மத்திய தொகுதி, கே.ஆர்.பெரியகருப்பனுக்கு திருப்பத்தூர், மெய்யநாதனுக்கு ஆலங்குடி, எஸ்.ரகுபதிக்கு திருமயம் தொகுதி, கோவி.செழியனுக்கு திருவிடைமருதூர், டி.ஆர்.பி.ராஜாவுக்கு மன்னார்குடி தொகுதி, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் குறிஞ்சிப்பாடி தொகுதி, சிவசங்கருக்கு குன்னம் தொகுதி, அன்பில் மகேஸ் பொய்யாமொழிக்கு திருவெறும்பூர் தொகுதி, கே.என்.நேருக்கு திருச்சி மேற்கு, ஐ.பெரியசாமிக்கு ஆத்தூர் தொகுதி, மு.பெ.சாமிநாதனுக்கு காங்கேயம் தொகுதி, முத்துசாமிக்கு ஈரோடு மேற்கு தொகுதி, மூர்த்திக்கு மதுரை கிழக்கு, மதிவேந்தனுக்கு ராசிபுரம் தொகுதி, எ.வ.வேலுக்கு திருவண்ணாமலை தொகுதி, துரைமுருகனுக்கு காட்பாடி தொகுதி, தா.மோ.அன்பரசனுக்கு ஆலந்தூர் தொகுதி, மா.சுப்பிரமணியனுக்கு சைதாப்பேட்டை, உதயநிதி ஸ்டாலினுக்கு சேப்பாக்கம் தொகுதி, சேகர்பாபுவுக்கு துறைமுகம் தொகுதி, நாசருக்கு ஆவடி தொகுதி, மு.க.ஸ்டாலினுக்கு கொளத்தூர் தொகுதி என அமைச்சர்கள் பலருக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

கடந்த சட்டமன்றத் தேர்தலில் கரூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு இம்முறை கோயமுத்தூர் தெற்கு தொகுதியில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. அதிமுகவில் இருந்து விலகி அண்மையில் திமுகவில் இணைந்த முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு போடி தொகுதியில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. அதே போல் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்களான மனோஜ் பாண்டியனுக்கு ஆலங்குளம் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்த வைத்தியலிங்கத்துக்கு ஒரத்தநாடு தொகுதியில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. உயர்கல்வித்துறை அமைச்சராக பதவி வகித்து வந்த முன்னாள் அமைச்சரான பொன்முடிக்கு இந்த தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. ஆனால் பொன்முடியின் மகனான கெளதம சிகாமணிக்கு திருக்கோயிலூர் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

அதே போல், தற்போதைய அமைச்சர்களான ஆர்.காந்தி, மனோ தங்கராஜ், கயல்விழி செல்வராஜ் ஆகிய 3 பேருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. ஆனால், ஆர்.காந்தியின் மகன் வினோத் காந்திக்கு ராணிப்பேட்டை தொகுதியிலும், கயல்விழி செல்வராஜின் கணவர் க.செல்வராஜுக்கு பல்லடம் தொகுதியிலும் போட்டியிட இம்முறை வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. 

Source link