டெஹ்ரான்: அமெரிக்கப் படைகளுக்கு அடைக்கலம் கொடுத்துள்ள நாடுகள் குறிவைக்கப்படும் என்று ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன் தெரிவித்து உள்ளார்.
ஈரான்- இஸ்ரேல், அமெரிக்கா இடையே ஒரு மாதத்திற்கும் மேலாக மோதல் நடைபெற்று வரும் நிலையில், சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், ஓமன், குவைத், கத்தார் உள்ளிட்ட பிராந்தியத்தின் பல நாடுகள் இந்தப் போரில் சிக்கியுள்ளன. அமெரிக்கா வளைகுடா நாடுகளில் உள்ள தனது ராணுவத் தளங்களைப் பயன்படுத்தி ஈரான் மீது தாக்குதல்களை நடத்தி வருகிறது. பதிலடியாக ஈரானும் இந்த நாடுகள் மீது தாக்குதல்களை நடத்தி வருகிறது.
அமெரிக்கப் படைகளுக்கு அடைக்கலம் கொடுத்துள்ள நாடுகள் குறி வைக்கப்படும் என ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன் கூறியதாவது: ஈரான் முன்னெச்சரிக்கைத் தாக்குதல்களை நடத்துவதில்லை என்று நாங்கள் பலமுறை கூறியுள்ளோம். ஆனால் எங்கள் உள்கட்டமைப்பு அல்லது பொருளாதார மையங்கள் குறிவைக்கப்பட்டால் நாங்கள் கடுமையாகப் பதிலடி கொடுப்போம்.
அமெரிக்கப் படைகளுக்கு அடைக்கலம் கொடுத்துள்ள நாடுகள் குறி வைக்கப்படும். பிராந்திய நாடுகளுக்கு நீங்கள் வளர்ச்சியையும், பாதுகாப்பையும் விரும்பினால், எங்கள் எதிரிகள் உங்கள் நிலங்களிலிருந்து போரை நடத்த அனுமதிக்காதீர்கள். இவ்வாறு மசூத் பெஷெஷ்கியன் கூறியுள்ளார்.
