தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி பங்கீட்டை நிறைவு செய்து தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், இன்று (28-03-26) 164 தொகுதிகளில் நேரடியாக போட்டியிடும் திமுக வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார்.
அதன்படி, திமுக சார்பில் இந்த தேர்தலில் போட்டியிட 60 புதுமுகங்களுக்கும், 18 பெண்களுக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த வேட்பாளர் பட்டியலில், 7 முனைவர் பட்டம் பெற்றவர்கள், 15 மருத்துவர்கள், 17 பொறியாளர்கள், 29 சட்டம் முடித்தவர்கள் என 125 பட்டம் பெற்றவர்கள் இடம்பெற்றுள்ளனர். இந்த தேர்தலில் 121 தொகுதிகளில் திமுக – அதிமுக, 18 தொகுதிகளில் திமுக – பா.ஜ.க, 17 தொகுதிகளில் அதிமுக – காங்கிரஸ், 5 தொகுதிகளில் அதிமுக – தேமுதிக என நேரடி போட்டி நடக்கவுள்ளது.
இதில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை எதிர்த்து திமுக சார்பில் எடப்பாடி தொகுதியில் காசி என்பவர் போட்டியிடவுள்ளார். பாலக்கோட்டில் கே.பி.அன்பழகனை எதிர்த்து திமுக முன்னாள் எம்.பி செந்தில் குமார் போட்டியிடவுள்ளார். மதுரை மேற்கில் செல்லூர் ராஜுவை எதிர்த்து திமுக சார்பில் ரகு பாலாஜி என்பவர் போட்டியிடவுள்ளார். அருப்புக்கோட்டையில் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரனை எதிர்த்து அதிமுக சார்பில் எஸ்.சேதுபதி போட்டியிடவுள்ளார். ராயபுரத்தில் ஜெயக்குமாரை எதிர்த்து திமுக சார்பில் சுபேர்கான் போட்டியிடவுள்ளார்.
குமாரபாளையத்தில் தங்கமணியை எதிர்த்து திமுக சார்பில் எஸ்.பாலு, தொண்டாமுத்தூரில் எஸ்.பி.வேலுமணியை எதிர்த்து திமுகவில் என்.ஆர்.கார்த்திகேயன், திண்டுக்கல்லில் முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனை எதிர்த்து திமுகவில் அமைச்சர் ஐ.பெரியசாமியின் மகன் ஐ.பி.செந்தில் குமார், கரூரில் எம்.ஆர்.விஜயபாஸ்கரை எதிர்த்து திமுகவில் தியாகராஜன், திருமங்கலத்தில் ஆர்.பி.உதயகுமாரை எதிர்த்து திமுகவில் சேடப்பட்டி மணிமாறன் ஆகியோர் போட்டியிடவுள்ளனர். கோவில்பட்டியில் கடம்பூர் ராஜுவை எதிர்த்து திமுகவில் க.கருணாநிதி, விராலிமலையில் டாக்டர் விஜயபாஸ்கரை எதிர்த்து திமுக சார்பில் கே.கே.செல்லபாண்டியன், வேதாரண்யத்தில் ஓ.எஸ்.மணியனை எதிர்த்து திமுகவில் மா.மீ.புகழேந்தி, மதுரை மத்திய தொகுதி அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேலுவுக்கு எதிராக புதிய நீதிக்கட்சி சார்பில் இரட்டை இலை சின்னத்தில் இயக்குநர் சுந்தர்.சி ஆகியோர் போட்டியிடவுள்ளனர்.
