2026 சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள அனைத்து கட்சிகளும் தங்களது பணிகளைத் தீவிரப்படுத்தி வருகின்றனர். தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக ஏப்ரல் 23ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற வாக்கு எண்ணிக்கை மே 4ஆம் தேதி நடைபெறுகிறது. தமிழ்நாட்டில் பிரதான கட்சிகளான திமுகவும் அதிமுகவும் தங்களது கூட்டணிக் கட்சிகளுடன் கூட்டணி பங்கீட்டை முடித்து அடுத்தக்கட்ட பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளனர்.
இந்த சூழலில், கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி பங்கீட்டை நிறைவு செய்து திமுக சார்பில் நேரடியாக போட்டியிடும் 164 வேட்பாளர்கள் பட்டியலை தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், இன்று (28-03-26) வெளியிட்டார். அதன்படி, திமுக சார்பில் இந்த தேர்தலில் போட்டியிட 60 புதுமுகங்களுக்கும், 18 பெண்களுக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த வேட்பாளர் பட்டியலில், 7 முனைவர் பட்டம் பெற்றவர்கள், 15 மருத்துவர்கள், 17 பொறியாளர்கள், 29 சட்டம் முடித்தவர்கள் என 125 பட்டம் பெற்றவர்கள் இடம்பெற்றுள்ளனர். இந்த தேர்தலில் 121 தொகுதிகளில் திமுக – அதிமுக, 18 தொகுதிகளில் திமுக – பா.ஜ.க, 17 தொகுதிகளில் அதிமுக – காங்கிரஸ், 5 தொகுதிகளில் அதிமுக – தேமுதிக என நேரடி போட்டி நடக்கவுள்ளது.
இந்த தேர்தலில் 3 அமைச்சர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்ட நிலையில், 28 அமைச்சர்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அந்த வகையில் கடந்த சட்டமன்றத் தேர்தலில் சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற உதயநிதி ஸ்டாலினுக்கு இம்முறை அந்த தொகுதியில் மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. திமுக வேட்பாளர் பட்டியலை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டதை தொடர்ந்து துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “எனக்கு இன்னொரு வாய்ப்பு கொடுத்ததற்காக பொதுச் செயலாளருக்கு எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். நிச்சயமாக சேப்பாக்கம் பகுதி மக்கள் மீண்டும் எனக்கு ஆதரவு தருவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது. தமிழ்நாடு முழுவதும் பிரச்சாரத்தை தொடங்க நாளை மறுநாள் திட்டமிட்டிருக்கிறார்கள். அதற்காக உத்தரவை முதல்வர் வெளியிடுவார். வேட்பாளர் பட்டியலில் புதியவர்கள் நிறைய பேருக்கு வாய்ப்பு கொடுத்திருக்கிறார்கள். இளைஞர்களுடைய நம்பிக்கையை இந்த இயக்கம் பெற வேண்டும் என்பதால் இளைஞர்களுக்கு நிறைய வாய்ப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது” என்று கூறினார்.
கடந்த தேர்தலில் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்று பிரச்சாரத்தை தொடங்கியதை தொடர்ந்து தற்போது நீட் தேர்வு ரத்து செய்யப்படவில்லையே என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், “காங்கிரஸ் பேரியக்கம் மத்தியில் ஆட்சியில் வந்தால் திமுகவின் வலியுறுத்தால் நீட் தேர்வை ரத்து செய்வோம் என 2021 தேர்தலில் ராகுல் காந்தி இங்கே வந்து சொன்னார். நாங்கள் இரண்டு முறை சட்டமன்றத்தில் அந்த தீர்மானத்தை நிறைவேற்றி அனுப்பி வைத்திருக்கிறோம். பா.ஜ.க இருப்பதால் தான் இன்றைக்கு தமிழ்நாட்டுக்குள் நீட்டை ஒழிக்க முடியாத சூழல் இருக்கிறது. என்றைக்கு பா.ஜ.க அப்புறப்படுத்தப்படுகிறதோ, என்றைக்கு ஒரு சுயமரியாதை உள்ள ஒரு இயக்கம் வருகிறதோ நிச்சயமாக தமிழ்நாட்டில் நீட் ஒழிக்கப்படும். நீட்டை ஒழிக்க வேண்டும் என்பது தான் திமுகவில் இலக்கு” என்று கூறினார்.
