சென்னை: பெரம்பூரில் பிரசாரத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டது தொடர்பாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரியிடம் தவெக தலைவர் விஜய் புகார் மனு அளித்துள்ளார்.
சட்டசபை தேர்தலையொட்டி பெரம்பூரில் தவெக தலைவர் விஜய் பிரசாரம் செய்வதாக இருந்தது. ஆனால், அவரது பிரசாரத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டது. விஜயின் பிரசாரத்திற்கு தவெக தேர்வு செய்த இடத்திற்கு போலீசார் பரிந்துரைக்காததால் அனுமதி மறுக்கப்பட்டதாக பெரம்பூர் தொகுதி தேர்தல் அலுவலர் கீதா விளக்கம் அளித்திருந்தார்.
இது தவெகவினருக்கு அதிருப்தியையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. மேலும், திமுகவுக்கு ஆதரவாக அதிகாரிகள் சிலர் செயல்படுவதாகவும், அவர்களை பணியிட மாற்றம் செய்ய வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்த நிலையில், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக்கை, சென்னை தலைமை செயலகத்தில் சந்தித்து தவெக தலைவர் விஜய் புகார் மனு அளித்துள்ளார். அந்த மனுவில், ‘சில அதிகாரிகள் திமுகவுக்கு சாதகமாக செயல்படுகின்றனர். குறிப்பாக, தலைமைச் செயலாளர், நிதித்துறை செயலாளர் மற்றும் டிஜிபி உள்ளிட்ட 6 அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்ய வேண்டும்,’ என்று குறிப்பிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனிடையே, முதல்வர் ஸ்டாலின் போட்டியிடும் கொளத்தூர், வில்லிவாக்கம் தொகுதியில் விஜய் பிரசாரத்துக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது. அங்கு நாளை மறுநாள் (மார்ச் 30) பிரசாரம் செய்கிறார்.
