உணவு, காலப் பயணம், அரண்மனை அரசியல், காதல்… இவை அனைத்தையும் ஒன்றாக கலந்து தரும் ஒரு கதை என்றாலே, அது நம் கவனத்தை ஈர்க்கும். அதுவும் கொரியன் டிராமா எனில் ஆர்வம் மேலோங்கிவிடும். அப்படியான ஒரு கே-டிராமா வெப் சீரிஸ்தான் ‘Bon Appétit, Your Majesty’. முதல் எபிசோடில் இருந்தே ‘இதுதான் கதை’ என்று சில தொடர்கள் நமக்கு தெளிவாக சொல்லிவிடும். மிகவும் எளிமையான நேர்கோட்டில் செல்லும் கதைகள் பலவும் கே-டிராமாக்கள் இருக்கின்றன. அவற்றில் இதுவும் ஒன்று.
இந்தத் தொடரில் நம்மை ஈர்க்கும் முதல் விஷயம், அதன் எளிமை. காதல், சரித்திரம், சமையல், உணவு, உணவோடு பின்னிப் பிணையும் நம் உணர்வுகள் என எல்லா கலவையையும் கதைக்களத்தில் முழுமையாக கொடுத்து, நம்மை அதிகம் யோசிக்க விடாமல், நகைச்சுவையுடன் கூடிய தொடரில் ரசித்து மூழ்கும் அனுபவம் கடத்தப்படுவது தனிச் சிறப்பு.
‘லாஜிக் இல்லா மேஜிக்’ என்பதன் அடிப்படையில் இந்தத் தொடரின் நகைச்சுவை கலந்த திரைக்கதை நம்மை தொடருடன் அழகாக ஒன்றிடச் செய்கிறது. தொடரின் பெரும்பாலான பகுதிகளில், இந்த அணுகுமுறை நன்றாக வேலை செய்கிறது. நகைச்சுவை, அழகான காட்சிகள், வலுவான நடிப்பு, உணவை வெறும் காட்சியாக அல்லாமல் உணர்வாக பயன்படுத்தும் தன்மை உள்ளிட்டவை நாம் எளிதாக ரசிக்கக் கூடிய, மனதுக்கு நெருக்கமான ஓர் அனுபத்தை நல்கிடுவதை உணரலாம்.
இந்தத் தொடரோடு பயணிக்கும்போது, கதையில் பின்னியிருக்கும் உணர்ச்சிகள் அதிகமாக சுமையாகாமல் ஓர் அழகிய உணர்வை ஏற்படுத்தி, நம் மனதில் கதாபாத்திரங்களை பதிய வைக்கிறது திரைக்கதையும் காட்சியமைப்பும். ஒவ்வொரு எபிசோடும் அழகாக பரிமாறப்பட்ட ஓர் உணவு போல தோன்ற வைக்கவல்லது Bon Appetite your Majesty வெப் தொடர்.
