-டில்லி சிறப்பு நிருபர்-
பீஹாரில் மீண்டும் சட்டசபை தேர்தல் நடத்த உத்தரவிடக்கோரி, ஜன் சுராஜ் கட்சி தலைவர் பிரசாந்த் கிஷோர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், ‘தேர்தலில் உங்களை நிராகரித்தது மக்கள்; ஆனால், நீதிமன்றத்தை நாடி விளம்பரம் தேடப் பார்க்கிறீர்களா?’ என, கண்டித்து மனுவை தள்ளுபடி செய்தது.
பீஹார் சட்டசபைக்கு கடந்தாண்டு நவம்பரில் நடந்த தேர்தலில், பா.ஜ., தலைமையிலான தே.ஜ., கூட்டணி வெற்றி பெற்றது. நிதீஷ் குமார் முதல்வராக பொறுப்பேற்றார்.
இந்த தேர்தலில், பிரபல தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சி முதன்முறையாக போட்டியிட்டு, அனைத்து தொகுதிகளிலும் படுதோல்வி அடைந்தது.
விதிமீறல்
இந்நிலையில், நடந்து முடிந்த தேர்தலை ரத்து செய்யக்கோரி, உச்ச நீதிமன்றத்தில் பிரசாந்த் கிஷோர் மனு தாக்கல் செய்தார்.
அதன் விபரம்:
பீஹார் சட்டசபை தேர்தலுக்கு சில வாரங்களுக்கு முன் துவங்கப்பட்ட, ‘மகிளா ரோஜ்கர் யோஜனா’ திட்டத்தின் கீழ், பெண்களின் வங்கிக் கணக்குகளில் நேரடியாக 10,000 ரூபாய் செலுத்தப்பட்டது. இது தேர்தல் நடத்தை விதி மீறல். எனவே மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப் பிரிவு 123-ன் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும், தேர்தலின் போது பீஹார் மாநில சுய உதவிக் குழுக்களை சேர்ந்த, 1.80 லட்சம் பெண்கள் மாநில அரசால் ஓட்டுச்சாவடியில் நிறுத்தப்பட்டனர். இதுவும் தேர்தல் நடத்தை விதி மீறல். பீஹாரில் தேர்தல் நேர்மையாக நடக்கவில்லை. எனவே, மீண்டும் புதிதாக தேர்தல் நடத்த உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கோரப்பட்டு இருந்தது.
நிவாரணம்
இந்த மனு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
பீஹாரில் உள்ள 243 சட்டசபை தொகுதிகளில், 242 இடங்களில் போட்டியிட்ட ஜன் சுராஜ் கட்சி ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. உங்களுடைய கட்சி எத்தனை சதவீதம் ஓட்டுகள் பெற்றது?
மக்கள் உங்களை நிராகரித்தவுடன் நீதிமன்றத்தை நாடி நிவாரணம் பெற விரும்புகிறீர்கள். இது கண்டிக்கத்தக்கது. திட்டங்களை எதிர்த்து மனு தாக்கல் செய்ய வேண்டும் எனில், தேர்தலுக்கு முன்பே செய்திருக்க வேண்டும்.
ஆனால் நீங்களோ, நடந்து முடிந்த தேர்தலை ரத்து செய்யக்கோரி மனு தாக்கல் செய்கிறீர்கள். இதை ஏற்றுக்கொள்ள முடியாது. மனுவை தள்ளுபடி செய்கிறோம்.
இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
