2026 சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள அனைத்து கட்சிகளும் தங்களது பணிகளைத் தீவிரப்படுத்தி வருகின்றனர். தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக ஏப்ரல் 23ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற வாக்கு எண்ணிக்கை மே 4ஆம் தேதி நடைபெறுகிறது. தமிழ்நாட்டில் பிரதான கட்சிகளான திமுகவும் அதிமுகவும் தங்களது கூட்டணிக் கட்சிகளுடன் கூட்டணி பங்கீட்டை முடித்து அடுத்தக்கட்ட பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளனர்.
திமுக கூட்டணியைப் பொறுத்தவரையில், இந்திய யூனியன் முஸ்லீம் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி ஆகிய கட்சிக்கு தலா 2 தொகுதிகள், மதிமுகவுக்கு 4 தொகுதிகள், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு 2 தொகுதிகள், இந்தியன் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள், காங்கிரஸுக்கு 28 தொகுதிகள், விசிகவுக்கு 8 தொகுதிகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள், தேமுதிக 10 தொகுதிகள், மனிதநேய ஜனநாயகக் கட்சி, எஸ்.டி.பி.ஐ, முக்குலத்தோர் புலிப்படை, தமிழர் தேசம் கட்சி ஆகிய கட்சிகளுக்கு தலா 1 என மொத்தம் 69 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் 11 தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்தில் மற்ற கட்சியினர் போட்டியிடவுள்ளனர். திமுக கூட்டணியில் இருக்கும் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம், இந்த தேர்தலில் போட்டியிடவில்லை என்றும் திமுக கூட்டணி கட்சிகளுக்கு ஆதரவளிப்பதாகவும் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், திமுக கூட்டணியில் இருந்து தேமுதிகவுக்கு ஒதுக்கப்பட்ட 10 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் இன்று (28-03-26) வெளியிட்டார். அதன்படி, பிரேமலதா விஜயகாந்த் விருத்தாச்சலம் தொகுதியிலும், விஜய பிரபாகரன் விருதுநகர் தொகுதியிலும், வி.இளங்கோவன் தருமபுரி தொகுதியிலும், மோகன்ராஜ் சேலம் மேற்கு தொகுதியிலும், ஏ.ஆர்.இளங்கோவன் ஓமலூர் தொகுதியிலும், எல்.வெங்கடேசன் மைலம் தொகுதியிலும், அனகை டி.முருகேசன் பல்லாவரம் தொகுதியிலும், கிருஷ்ணமூர்த்தி திருத்தணி தொகுதியிலும், கே.பி.பிரதாப் குடியாத்தம் (தனி) தொகுதியிலும், சரவணன் போரூர் தொகுதியிலும் போட்டியிடவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
