– நமது டில்லி நிருபர் –
”லோக்சபாவில் எதிர்க்கட்சிகள் பொறுப்பு இல்லாமல், தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால், பட்ஜெட் கூட்டத் தொடரில் 19 மணி நேரம் வீணா கிவிட்டது,” என, சபாநாய கர் ஓம் பிர்லா விரக்தியை வெளிப்படுத்தினார்.
லோக்சபா நேற்று காலை கூடியதும், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் வழக்கம் போல அமளியில் ஈடுபட்டனர்.
அமெரிக்காவுடனான வர்த்தக ஒப்பந்தம், லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் பேசுவதற்கு அனுமதி மறுப்பு, எட்டு எம்.பி.,க்கள் சஸ்பெண்ட் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து பிரச்னை எழுப்பிய எதிர்க்கட்சி எம்.பி.,க் கள், அரசுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பினர்.
மேலும், சபையின் மையப் பகுதிக்கு சென்று, கூச்சலிட்டனர். இதனால், ஆவேசமடைந்த சபாநாயகர் ஓம் பிர்லா, எதிர்க்கட்சியினர் பொறுப்பு இல்லாமல் நடந்து கொள்வதாக கடிந்து கொண்டார்.
அப்போது அவர் பேசியதாவது:
பட்ஜெட் கூட்டத் தொடர் துவங்கியது முதலே பொறுப்புணர்வு இல்லாமல், சபையில் கூச்சலிட்டு வருகிறீர்கள். இதனால், சபையின் அலுவல்கள் பாதிக்கின்றன. எதிர்க்கட்சி எம்.பி.,க்களின் பொறுப்பற்ற அணுகுமுறையால், 19 மணி நேரம் 13 நிமிடங்கள் வரை லோக்சபாவின் பொன்னான நேரம் வீணடிக்கப்பட்டுள்ளது.
லோக்சபாவில் எதிர்க்கட்சி எம்.பி.,க்களின் நடத்தையை பொதுமக்கள் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர். இன்றைய அலுவல் பட்டியலில், காங்கிரஸ் எம்.பி., பிரியங்காவின் கேள்வி இடம் பெற்றுள்ளது. அதற்கான பதிலை கேட்பதற்கு கூட விருப்பம் இல்லையா?
இவ்வாறு அவர் பேசினார்.
அப்போதும் எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் தொடர் அமளியில் ஈடுபட்டதால், வேறு வழியில்லாமல் மதியம் 12:00 மணி வரை சபையை ஒத்திவைப்பதாக அறிவித்தார்.
அதன் பின், மீண்டும் லோக்சபா கூடியபோதும், இதே நிலை தொடர்ந்தது. பதாகைகளை உயர்த்தி பிடித்து, எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் கூச்சலிட்டனர்.
அவர்களை அமைதியாக இருக்கையில் அமரும்படி சபையை வழிநடத்திய கிருஷ்ண பிரசாத் தென்னடி பலமுறை கேட்டுக் கொண்டார். எனினும், எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் தொடர்ந்து கூச்சலிட்டதால், நாள் முழுதும் சபையை அவர் ஒத்திவைத்தார்.
