விறுவிறு தேர்தல் களம்; வேட்பாளர்களை அறிவித்த திமுக கூட்டணிக் கட்சிகள்!

2026 சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள அனைத்து கட்சிகளும் தங்களது பணிகளைத் தீவிரப்படுத்தி வருகின்றனர். தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக ஏப்ரல் 23ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற வாக்கு எண்ணிக்கை மே 4ஆம் தேதி நடைபெறுகிறது. தமிழ்நாட்டில் பிரதான கட்சிகளான திமுகவும் அதிமுகவும் தங்களது கூட்டணிக் கட்சிகளுடன் கூட்டணி பங்கீட்டை முடித்து அடுத்தக்கட்ட பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளனர்.

திமுக கூட்டணியைப் பொறுத்தவரையில், இந்திய யூனியன் முஸ்லீம் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி ஆகிய கட்சிக்கு தலா 2 தொகுதிகள், மதிமுகவுக்கு 4 தொகுதிகள், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு 2 தொகுதிகள், இந்தியன் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள், காங்கிரஸுக்கு 28 தொகுதிகள், விசிகவுக்கு 8 தொகுதிகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள், தேமுதிக 10 தொகுதிகள், மனிதநேய ஜனநாயகக் கட்சி, எஸ்.டி.பி.ஐ, முக்குலத்தோர் புலிப்படை, தமிழர் தேசம் கட்சி ஆகிய கட்சிகளுக்கு தலா 1 என மொத்தம் 69 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் 11 தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்தில் மற்ற கட்சியினர் போட்டியிடவுள்ளனர். திமுக கூட்டணியில் இருக்கும் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம், இந்த தேர்தலில் போட்டியிடவில்லை என்றும் திமுக கூட்டணி கட்சிகளுக்கு ஆதரவளிப்பதாகவும் தெரிவித்துள்ளது.  

இந்த நிலையில், திமுக கூட்டணியில் இருந்து ஒதுக்கப்பட்ட தொகுதிகளின் வேட்பாளர்களை கூட்டணி கட்சிகள் அறிவித்துள்ளது. மதிமுகவைப் பொறுத்தவரை, மொடக்குறிச்சி தொகுதியில் செந்தில் நாதன், மதுரை தெற்கு தொகுதியில் பூமிநாதன், கடையநல்லூர் தொகுதியில் ராஜேந்திரன், சீர்காழி தொகுதியில் செந்தில் செல்வன் ஆகிய 4 பேர் போட்டியிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  திமுக கூட்டணியில் உள்ள கொங்கு மக்கள் தேசிய கட்சியை பொறுத்தவரையில் திருசெங்கோடு தொகுதியில் ஈஸ்வரனும், பொள்ளாச்சி தொகுதியில் நித்தியானந்தனும் போட்டியிடவுள்ளனர்.

அதே போல், இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் கட்சி சார்பில், வாணியம்பாடி சையது பாருக், பாபநாசம் தொகுதியில் ஏ.எம்.சாஜகான் ஆகியோர் அக்கட்சியின் சின்னமான ஏணி சின்னத்தில் போட்டியிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மனிதநேய ஜனநாயகக் கட்சி சார்பில் அக்கட்சியின் தலைவர் தமிமுன் அன்சாரி சிதம்பரம் தொகுதியில் போட்டியிடவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மனிதநேய மக்கள் கட்சி சார்பில் மணப்பாறை தொகுதியில் அப்துல் சமது என்பவரும், நாகப்பட்டினம் தொகுதியில் ஜவாஹிருல்லாவும் போட்டியிடவுள்ளதாக அக்கட்சி அறிவித்துள்ளது. 

Source link