சென்னை: லேட்டாக வந்தாலும் லேட்டஸ்ட் ஆக வந்துள்ளோம் என திமுக வேட்பாளர்கள் பட்டியல் தாமதம் குறித்து முதல்வரும், அக்கட்சியின் தலைவருமான ஸ்டாலின் கூறி உள்ளார். வேட்பாளர் பட்டியல் தாமதம் தான் என்றாலும், அதில் உள்ள சில முக்கிய அம்சங்கள், முக்கிய தகவல்களை இங்கே விரிவாக பார்க்கலாம்.
இம்முறை திமுக வேட்பாளர்கள் பட்டியலை கன்னியாகுமரி தொகுதியின் பெயரை முதலில் சொல்லி முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டு உள்ளார். வேட்பாளர்கள் யார், எந்த தொகுதி என்றும், அவர்களின் கல்வித்தகுதி உள்ளிட்ட விவரங்களையும் வெளியிட்டு இருக்கிறார்.
திமுகவின் வேட்பாளர் பட்டியலில் சில ஆச்சரியங்களும் இருந்திருக்கின்றன என்பதே கள யதார்த்தம். இந்த முறை திமுக முக்கிய அமைச்சர்கள் பெரும்பாலனவர்களுக்கு தங்கள் தொகுதிகளிலேயே மீண்டும் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டு உள்ளது.
இந்த பட்டியலில் அமைச்சர்கள் மனோ தங்கராஜ், கயல்விழி செல்வராஜ், காந்தி ஆகிய மூவருக்கும் வாய்ப்பு அளிக்கப்படவில்லை. ஆனால், கொஞ்சம் ஆச்சரியம் தரும் வகையில், அமைச்சர் காந்தி மகன் வினோத் காந்திக்கு ராணிப்பேட்டை தொகுதி தரப்பட்டுள்ளது. கைத்தறித்துறை ஊழல்கள் குறித்து தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்ட அறிக்கையும் ஒரு காரணம் எனலாம்.
ஹிந்து மதம், பெண்கள் பற்றிய சர்ச்சை பேச்சுகள் எதிரொலியாக முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கும் இம்முறை சீட் இல்லை. அவரும் விருப்ப மனுவையும் கூட தாக்கல் செய்யவில்லை. ஆனால் மகன் கவுதம சிகாமணிக்கு திருக்கோவிலூர் தொகுதியில் வாய்ப்பு அளிக்கப்பட்டு உள்ளது.
தற்போது எம்எல்ஏக்களான கருணாநிதி, ராஜா, எழிலரசன், வரலட்சுமி மதுசூதனன், ஐ.பி.மூர்த்தி, தாயகம் கவி, எழும்பூர் பரந்தாமன் உள்ளிட்டோருக்கும் வாய்ப்பு தரப்படவில்லை. இந்த பட்டியலில் லால்குடி சவுந்தர ராஜன், ஸ்ரீரங்கம் பழனியாண்டி, முசிறி காடுவெட்டி தியாகராஜன் ஆகியோரது பெயர்களும் வேட்பாளர் பட்டியலில் இடம்பெறவில்லை.
மறைந்த திமுக பொதுசெயலாளர் அன்பழகன் பேரன் வெற்றியழகனுக்கு வில்லிவாக்கம் தொகுதி இம்முறை வழங்கப்படவில்லை. தி நகர் எம்எல்ஏ கருணாநிதிக்கு(ஜெ.அன்பழகன் சகோதரர்) வாய்ப்பு மறுக்கப்பட்டு, ஜெ. அன்பழகன் மகன் ராஜா அன்பழகனுக்கு போட்டியிட வாய்ப்பு தரப்பட்டுள்ளது. அண்ணாநகர் சிட்டிங் எம்எல்ஏ மோகனுக்கு பதில், அவரது மகன் கார்த்திக் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டு உள்ளது.
இவர்கள் மட்டுமல்லாது, ஜோலார்பேட்டை தேவராஜ், வேடசந்தூர் காந்திராஜன், ஓசூர் பிரகாஷ், பரமக்குடி முருகேசன் உள்ளிட்ட பலருக்கும் மீண்டும் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படவில்லை.
அதேபோல, சென்னையில் தற்போது எம்எல்ஏக்களாக உள்ள 6 பேருக்கு மீண்டும் தொகுதி ஒதுக்கப்படவில்லை. திமுக இணை அமைப்புச் செயலாளர் அன்பகம் கலை மகன் கலை கதிரவனுக்கு தென்காசி தொகுதி வழங்கப்பட்டுள்ளது. சென்னை எழும்பூரில் திமுகவின் தமிழன் பிரசன்னா, விஜய் போட்டியிடுவார் என்று கருதப்படும் பெரம்பூர் தொகுதியில் ஆர்.டி. சேகர் 3வது முறையாக களம் இறங்குகிறார்.
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஓபிஎஸ்சுக்கு போடி தொகுதி தரப்பட்டுள்ள நிலையில், அவருடன் திமுகவில் இணைந்த உசிலம்பட்டி அய்யப்பனுக்கு வாய்ப்பு தரப்படவில்லை. காரணம் அந்த தொகுதி காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டுவிட்டது. திமுகவில் 18 பெண்கள் வேட்பாளர்களாக களம் இறங்குகின்றனர். பெரும்பாலான இளைஞர்களுக்கும் (60க்கும் மேற்பட்டவர்கள்) வாய்ப்பு தரப்பட்டுள்ளது. இதுதவிர, மருத்துவர்கள், சட்டம் படித்தவர்கள், பொறியியல் துறை வல்லுநர்கள் போன்ற தகுதிகளை உடையவர்களுக்கும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டு உள்ளது.
அதிமுகவின் முக்கியமான முன்னாள் அமைச்சர்கள் களம் காணும் பல தொகுதிகளை கூட்டணிக் கட்சிகளுக்கு திமுக கொடுத்திருக்கிறது. இன்னும் சொல்ல வேண்டுமானால், காங்கிரஸ் மோதும் 28 தொகுதிகளில் அதிமுகவுடன் நேரடியாக 18 தொகுதிகளில் போட்டியிடுகிறது. அதில் பெரும்பாலான தொகுதிகள் கடந்த முறை காங்கிரஸ் வெற்றி பெற்றி தொகுதிகள் என்பது கூடுதல் அம்சம்.
தேமுதிக, கம்யூனிஸ்ட்டுகள், விடுதலை சிறுத்தைகள் ஆகிய கட்சிகளுக்கும் விருப்பப்பட்ட தொகுதிகளை தந்திருப்பதாகவே தெரிய வருகிறது. இதில் இடதுசாரிகளுக்கு ஒட்டு மொத்தமாக (5+5)அளிக்கப்பட்ட 10 தொகுதிகளில் 5 தனித்தொகுதிகள். சற்றே ஆச்சரியம் தரும் விதமாக தென் மாவட்டமான பெரியகுளம் தனித்தொகுதி விடுதலை சிறுத்தைகளுக்கு அளிக்கப்பட்டு இருக்கிறது.
மதிமுகவுக்கு மதுரை மேற்கு, மொடக்குறிச்சி, கடையநல்லூர் ( மூன்றிலும் உதயசூரியன் சின்னத்தில் போட்டி) ஆகிய பொதுத்தொகுதிகளும்,, தனிச்சின்னத்தில் சீர்காழி தனித்தொகுதியும் தரப்பட்டுள்ளது. கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சிக்கும் அவர்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்றபடி திருச்செங்கோடும், பொள்ளாச்சியும் தரப்பட்டு இருக்கிறது.
இதேபோல, மனிதநேய மக்கள் கட்சிக்கு நாகை, மணப்பாறை, மனிதநேய ஜனநாயக கட்சிக்கு சிதம்பரம், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு பாபநாசம், வாணியம்பாடி தரப்பட்டுள்ளது. தொகுதிகள் அடையாளம் காண்பதில் இழுபறி நீடித்தாலும், மொத்தத்தில் வேட்பாளர்கள் அறிவிப்பில் புதுமுகங்கள், பெரும்பான்மையான சிட்டிங் அமைச்சர்கள், விஐபி தொகுதிகளில் நேரடி போட்டி என கலந்து கட்டி வேட்பாளர்களை லேட்டாகவும், முதல்வர் ஸ்டாலின் சொல்வது போல் லேட்டஸ்ட்டாக அறிவித்த திமுக, அடுத்தக்கட்டமான தேர்தல் பிரசாரத்துக்கு தயாராகி விட்டது எனலாம்.
