சான் பிரான்சிஸ்கோ: மேஜர் லீக் கிரிக்கெட் தொடருக்கான சான் பிரான்சிஸ்கோ அணியில் இந்தியாவின் அஷ்வின் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
அமெரிக்காவில், வரும் ஜூன் 18ல் மேஜர் லீக் கிரிக்கெட் 4வது சீசன் துவங்குகிறது. மொத்தம் 6 அணிகள் பங்கேற்கின்றன. பைனல், ஜூலை 18ல் நடக்கவுள்ளது. இதில் இடம் பெற்றுள்ள சான் பிரான்சிஸ்கோ யுனிகார்ன்ஸ் அணியில், முன்னாள் இந்திய சுழற்பந்துவீச்சாளர் அஷ்வின் 39, ஒப்பந்தமானார். இதன்மூலம் இத்தொடரில் விளையாடும் முதல் இந்திய வீரரானார் அஷ்வின்.
இதுவரை 65 சர்வதேச ‘டி-20’ போட்டியில் (72 விக்கெட்) விளையாடிய அஷ்வின், வருடம் தோறும் நடக்கும் கிரிக்கெட் தொடரில் சென்னை, டில்லி, பஞ்சாப், ராஜஸ்தான், புனே அணிகளுக்காக பங்கேற்றார். இத்தொடரில் 221 போட்டியில், 187 விக்கெட் சாய்த்துள்ளார். கடந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடக்கும் ‘பிக் பாஷ் லீக்’ தொடருக்கான சிட்னி தண்டர்ஸ் அணியில் ஒப்பந்தமானார் இவர், காயத்தால் கடைசி நேரத்தில் விலகினார்.
சான் பிரான்சிஸ்கோ அணி நிர்வாகம் வெளியிட்ட செய்தியில், ”உலக கோப்பை (2011), சாம்பியன்ஸ் டிராபி (2013) வென்ற இந்திய அணியில் இடம் பிடித்திருந்த அஷ்வினின் சர்வதேச அனுபவம், எங்கள் அணியின் வெற்றிக்கு கைகொடுக்கும். இவரது வருகையால் அணியின் சுழற்பந்துவீச்சு பலமடைந்துள்ளது,” என, தெரிவித்திருந்தது.
