இஸ்லாமாபாத்: ஈரான் போர் சூழலில் மேற்காசியாவில் பதற்றத்தை தணிப்பதற்கான முயற்சிகள் உட்பட பல்வேறு

இஸ்லாமாபாத்: ஈரான் போர் சூழலில் மேற்காசியாவில் பதற்றத்தை தணிப்பதற்கான முயற்சிகள் உட்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து பாகிஸ்தான், சவுதி அரேபியா, எகிப்து மற்றும் துருக்கியை சேர்ந்த வெளியுறவு அமைச்சர்கள் இன்று ஆலோசனை நடத்த உள்ளனர்.

மேற்காசிய நாடான ஈரான் மீதான போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கு, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் முயன்று வருகிறார். ஈரான் தலைமையுடன் அமெரிக்கா நேரடியாக பேச முடியாததால், இந்த விஷயத்தில் மத்தியஸ்தம் செய்வதாக நம் அண்டை நாடான பாகிஸ்தான் முன்வந்தது.

இதை தொடர்ந்து, அமெரிக்க அதிபரின் 15 அம்ச அமைதி திட்டத்தை, ஈரானுக்கு அனுப்பி வைத்தது பாகிஸ்தான். ஈரானை பேச்சுக்கு வரவழைப்பதற்காக பல நாடுகளின் உதவியையும் பாகிஸ்தான் கேட்டுள்ளது.

இந்நிலையில், மேற்காசியாவில் பதற்றத்தை தணிப்பதற்கும், ஈரான் – அமெரிக்கா இடையே போர் நிறுத்தம் செய்வதற்கும் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம், பாகிஸ்தானின் இஸ்லாமாபாதில் இன்று நடக்கிறது.

பாகிஸ்தானின் துணை பிரதமரும், வெளியுறவு அமைச்சருமான இஷாக் தாரின் அழைப்பின் பேரில், மூன்று நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் பங்கேற்க உள்ளனர்.

சவுதி அரேபியா வெளியுறவு அமைச்சர் இளவரசர் பைசல் பின் பர்ஹான் அல் சவுத், துருக்கி வெளியுறவு அமைச்சர் ஹக்கன் பிடான் மற்றும் எகிப்து வெளியுறவு அமைச்சர் பத்ர் அப்தெலாட்டி இதில் பங்கேற்க உள்ளனர்.

இஸ்ரேலுக்கு பாக்., கண்டனம்!

இதற்கிடையே, ஈரான் அதிபர் மசூத் பெஷெஸ்கியான் உடன், ஷெபாஸ் ஷெரீப், தொலைபேசி வாயிலாக நேற்று பேசினார். அப்போது, போரை முடிவுக்கு கொண்டு வருவது குறித்து இருவரும் பேசியதாக தெரிகிறது. ஈரான் மீது இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்துவதற்கு ஷெபாஸ் ஷெரீப் கடும் கண்டனம் தெரிவித்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Source link