சான் ஏஞ்சலோ: டெகாத்லான் போட்டியில் சாதனை படைத்து தங்கம் வென்றார் தேஜஸ்வின் சங்கர்.
அமெரிக்காவின் டெக்சாசில் ‘டெவிட் நோபிள் ரிலே’ போட்டி நடந்தது. இதில் 10 பிரிவுகள் கொண்ட ‘டெகாத்லான்’ போட்டியில் இந்தியாவின் தேஜஸ்வின் சங்கர் பங்கேற்றார். நீளம் தாண்டுதல் (7.66 மீ.,), குண்டு எறிதல் (13.98 மீ.,), உயரம் தாண்டுதல் (2.13 மீ.,), 110 மீ., தடை ஓட்டம் (14.09 வினாடி) என 4 போட்டிகளில் முதலிடம் பிடித்தார்.
தவிர 100 மீ., ஓட்டத்தில் 2வது இடம் (10.59 வினாடி), வட்டு எறிதல் (38.08 மீ.,), போல் வால்ட் (4.35 மீ.,), ஈட்டி எறிதலில் (49.14 மீ.,) மூன்றாவது இடம் பெற்றார். 400 மீ.,ல் (48.76 வினாடி) நான்காவது, 1500 மீ.,ல் (4 நிமிடம், 51.14 வினாடி) ஆறாவது இடம் பெற்றார்.
மொத்தம் 10 போட்டியில் 7947 புள்ளியுடன் முதலிடம் பெற்று தங்கம் கைப்பற்றினார். தவிர இது புதிய தேசிய சாதனை ஆனது. முன்னதாக இவர் 7826 புள்ளி எடுத்ததே அதிகம். அமெரிக்காவின் எமில் உஹ்லின் (7773), டோரியன் சார்லஸ் (7720) அடுத்த இரு இடம் பிடித்தனர்.
