பெங்களூரு சின்னசாமி மைதானத்தில், ‘எம்.எல்.ஏக்களுக்கு இலவச டிக்கெட்’ கொடுக்கவில்லை என்பதை சில எம்.எல்.ஏக்கள் அரசியலாக மாற்றி அறச்சீற்றம் கொண்டிருந்தனர். கர்நாடகா கிரிக்கெட் போர்ட் அப்படி மூக்கு சிந்தி அழுது உருண்டு டிக்கெட் வாங்கி அமர்ந்திருக்கும் எம்.எல்.ஏக்களின் சீட் நம்பர்களை ஒரு பிரிண்ட் அவுட் போட்டு ஆர்.சி.பியின் கையில் கொடுத்துவிட்டார்கள் போல!
ஆர்.சி.பி பேட்டர்கள் குறிவைத்து அடித்ததில் அப்படி அத்தனை பந்துகளும் கேலரியில்தான் போய் விழுந்தது. எத்தனை பேரின் மண்டை உடைந்ததோ! சன்ரைசர்ஸ் வேடிக்கை மட்டுமே பார்க்க பெங்களூர் அணி எளிதில் வென்றிருக்கிறது.
நியாயப்படி பார்த்தால் ஐ.பி.எல் சீசனின் முதல் போட்டி பெரும் எதிர்பார்ப்பை கிளப்பி தொடங்கியிருக்க வேண்டும். ஆனால், இந்த ஆர்.சி.பி vs சன்ரைசர்ஸ் போட்டிக்கு பெரிய எதிர்பார்ப்பே இல்லை. போட்டிக்கு முன்பாக எந்த கொண்டாட்டமும் இல்லை. அதற்கு சரியான காரணமும் இருந்தது. ஆர்.சி.பியின் வெற்றிக் கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் ஆர்ப்பாட்டம் இல்லாமல் போட்டி தொடங்கியது.

சன்ரைசர்ஸ் அணியின் கேப்டனாக இஷான் கிஷன் வந்திருந்தார். சன்ரைசர்ஸின் ஜெர்சியில் இருந்த அளவுக்கு மாற்றங்கள் கூட அணியின் ஆடும் விதத்தில் இல்லை. ஃபேனை 12 ஆம் நம்பரில் வைத்ததை போல பேட்டை கடா முடாவென சுத்தி சிக்சர் அடிக்க வேண்டும். 250 ரன்கள் அடித்தாலும் பௌலர்கள் அதை வாரிக் கொடுத்துவிட்டு ‘நீ சிங்ம்தான்…’ பாட்டுக்கு பீல் பண்ணி நடப்பதை போல பெவிலியனுக்கு செல்ல வேண்டும். இதுதான் கடந்த சீசனில் அவர்களின் ஸ்டைல். இந்த சீசனின் தொடக்கப் போட்டியிலும் அதை செவ்வனே செய்தார்கள்.
ஆர்.சி.பிக்கு எப்போதும் ஒரு Starting Trouble இருக்கும். ‘பொறுங்க சார்…பாயிண்ட் வரட்டும்’ என்பதைப் போல முதல் சில போட்டிகளில் விட்டுப் பிடிப்பார்கள். ஆனால், இந்தப் போட்டியில் ‘அடடே. கோவிந்தா ஆளே மாறிட்டேளே…’ என்பது போல அத்தனை மாற்றம். மிகச்சிறப்பாக ஓப்பனிங் போட்டியை தொடங்கியிருந்தார்கள். சன்ரைசர்ஸ் வீரர்களை திமுக எதுவும் பிரசாரத்துக்கு அழைத்ததா என தெரியவில்லை. அத்தனை அவசரமாக விக்கெட்டை கொடுத்துவிட்டு வேகவேகமாக ஊருக்கு பெட்டி படுக்கையை கட்டுவதைப் போல கிளம்பினார்கள். பவர்ப்ளேயில் மட்டும் 3 விக்கெட்டுகளை இழந்திருந்தார்கள். நியூசிலாந்து பௌலர் டஃபிதான் மூன்று விக்கெட்டுகளையும் வீழ்த்தியிருந்தார்.

நீயெல்லாம் முன்னவே இருந்திருந்தா…18 வருசமா அண்ணன் இத்தனை அடி வாங்கிருப்பேனாடா..’ என்பதை போல குழப்பமான கொண்டாட்டத்தில் குதூகலித்தார் விராட் கோலி. ‘நாம் கட்டம் கட்டி அமைத்த ராஜதந்திரங்கள் அத்தனையும் இப்படி மண்ணாய் போகிறதே…’ என காவ்யா மாறன் பவர்ப்ளே முடிவதற்குள்ளேயே கன்னத்தில் கை வைத்துவிட்டார். அம்மணிக்காக ஜெயிலர் 2 ஆடியோ லான்ச்சில் தலைவர் ஒரு குட்டி மோட்டிவேஷனல் ஸ்டோரி சொல்ல தயாராகி வருகிறாராம்!
பொறுப்பேத்த உடனேயே தீக்குழில இறக்குறானுகளே…’ என்பது போல கடுகடுப்பில் உள்ளே வந்தார் கேப்டன் இஷான் கிஷன். ‘ஓனர் கொஞ்சம் கோவக்காரங்க. டீம் தோத்தா டப்பு டப்புனு கேப்டனை மாத்துவாங்க. வார்னர் கதையெல்லாம் தெரியும்ல..’ என க்ளாசென் கிஷன் காதில் கிசுகிசுக்க, ‘பதவிக்கு ஆபத்துனா தண்ணி மேலயே ஓடுவோம்டா…’ என வேகமெடுத்தார் இஷன் கிஶன். பாப்பம்பட்டியின் ஸ்டார் ப்ளேயர் போல கண்ணை மூடிக் கொண்டு வந்த பந்தையெல்லாம் சகட்டுமேனிக்கு சுத்தி பவுண்டரியாக்கினார். இப்போ கட்டையை போட்டாதான் உண்டு என க்ளாசென் கொஞ்சம் நிதானமாக ஆடினார். இஷன் கிஷன் அடித்த அடியில் பாய்ண்ட்டில் நின்ற விராட் கோலிக்கு பழைய ஆர்.சி.பி பௌலர்களின் நினைவெல்லாம் கொஞ்சம் வந்து போக ஜெர்க் ஆகினார்.

ரஜத் பட்டிதரை அழைத்து இரண்டு, மூன்று ராஜதந்திர டிப்ஸ்களையும் கொடுத்தார். ஆனால், அது எதுவும் வேலைக்காகவில்லை. ஒரு கட்டத்தில் க்ளாசெனும் அடிக்க ஆரம்பித்தார். ஆனால், அதிர்ஷ்டவசமாக ‘இருக்கு…ஆனா இல்லை’ என்பது போல ஒரு கேட்ச்சில் சிக்கி அவுட் ஆகினார். ரொமாரியோ ஷெப்பெர்ட்டின் பந்தில் க்ளாசென் ஒரு பெரிய சிக்சரை அடிக்க முயற்சி செய்ய, பவுண்டரி லைனில் சால்ட் அதை எப்படியோ உருண்டு பிரண்டு பிடித்து ‘இப்போ நான் எங்க இருக்கேன்’ என மண்டைக்கு மேல் நட்சத்திரங்கள் சுத்த தட்டுத் தடுமாறி எழுந்து நின்றார். சால்ட் பவுண்டரி ரோப்பை தொட்டதை போலவே இருந்தது. ஆனால், தேர்டு அம்பயர் என்ன அவசரத்தில் இருந்தாரோ தெரியவில்லை. பார்க்க கூடாததை பார்த்ததை போல படபடவென வீடியோ ரிப்ளேவை ஓடவிட்டு அவுட் கொடுத்தார்.
க்ளாசென் பவுண்டரி லைனிலேயே தர்மயுத்தம் நடத்த திட்டமிட்டார். ‘முதல் மேட்ச் சம்பளத்தை எதாச்சு சர்ச் உண்டியல்ல போடுங்க சார். வீணா பைன் கட்டி வம்பாக்காதீங்க’ என சமுத்திரக்கனி சாயலில் இருந்த ஒரு Fourth அம்பயர் அட்வைஸ் கொடுக்க மனம் திருந்தி பெவிலியனுக்கு சென்றார் க்ளாசென். தனியே…தன்னந்தனியே என தவித்துக் கொண்டிருந்த இஷன் கிஷனுக்கு அனிகேத் வர்மா கொஞ்சம் கம்பெனி கொடுத்தார். அவரும் அதிரடியாக ஆட சன்ரைசர்ஸ் ஒரு கௌரவமான ஸ்கோரை எட்டியது. ‘நம்ம போஸ்டிங்குக்கு ஒன்னும் ப்ராப்ளம் இல்ல…’ என்கிற மனதிருப்தியோடு 80 ரன்களில் அபிநந்தன் சிங்கின் பந்தில் அவுட் ஆகி வெளியேறினார். சன்ரைசர்ஸ் அணி மொய் எழுதுவதைப் போல 201 ரன்களை எட்டியது.

இன்னிங்ஸ் ப்ரேக்கில் கர்நாடகா கிரிக்கெட் அசோசியேஷனில் இருந்து விராட் கோலிக்கு சீலிடப்பட்ட கவரில் ஒரு ரகசிய மெசேஜ் வந்து சேர்ந்ததாக அங்கிருக்கும் பட்சி தகவல் சொன்னது. ‘வணக்கம் கோலி. பெட்ரோல், டீசல் கொஞ்சம் தட்டுப்பாடு ஆவதைப் போல இருக்கிறது. கையிருப்பு எதுவும் இல்லை. ஜெனரேட்டர் மூலம் ஓடும் ஸ்டேடியம் லைட் நீண்ட நேரம் ஓடாது. எதாவது செய்யுங்கள்’ என்றிருந்த லெட்டரை படித்த கோலி கண் சிவந்து 15 ஓவரில் போட்டியை முடிக்கும் முனைப்போடு களம் இறங்கினார். ‘விக்கெட்டே விடாம ஜெயிச்சா கண்ணு பட்டுரும். அதனால நீங்க மட்டும்…’ என விராட் கோலி கூற சால்ட் மட்டும் 8 ரன்களில் உனத்கட்டின் பந்தில் அவுட் ஆகி வெளியேறிவிட்டார். அடுத்ததாக தேவ்தத் படிக்கல் வந்தார். இவர் சமீபத்திய தமிழ் படங்களை போன்றவர். இன்னிங்ஸின் முதல் பாதி நன்றாக இருக்கும்.

‘
இரண்டாம் பாதி தட்டுத் தடுமாறும். ஆனால், இன்றைக்கு அப்படியே தலைகீழாக அடி வெளுத்தெடுத்தார். விராட் கோலி வழக்கம் போல ‘Scientific Calculator’ மோடில் சேஸிங்கில் மிரட்டினார். உனத்கட், ஈசான் மலிங்கா, ஹர்சல் படேல் என சன்ரைசர்ஸின் பௌலிங் யூனிட் படு வீக். இதில் ஒருவர் இருந்தாலே அடி வெளுப்பார்கள். மூன்று பேரும் இருந்தால் என்னாவது? கோலி, தேவ்தத், ரஜத் பட்டிதர் மூவரும் நெட்ஸில் ஆடுவதை போல ஆடி 15.4 ஓவர்களிலேயே போட்டியை முடித்துவிட்டார்கள். விராட் கோலியும் தேவ்தத் படிக்கலும் அரைசதம் அடித்திருந்தனர்.
‘சார் ஜீரோ பாருங்க…’ என்பதை போல பூஜ்ஜியம் பூஜ்ஜியமாக இருக்கும் புள்ளிப்பட்டியலில் முதல் போட்டியையே வென்று 2 புள்ளிகளோடு முதலிடத்துக்கு முன்னேறியிருக்கிறது ஆர்.சி.பி!
