4 எம்.எல்.ஏ.,க்களை பழி தீர்த்த அமைச்சர்: தி.மு.க., வேட்பாளர் பட்டியலில் 'கல்தா'

திருச்சி: திருச்சி மாவட்டத்தில் தன்னை எதிர்த்த நான்கு எம்.எல்.ஏ.,க்களுக்கு, தி.மு.க.,வில் ‘சீட்’ கிடைக்க விடாமல் அமைச்சர் நேரு தடுத்து விட்டதாக கூறப்படுகிறது.

திருச்சி மாவட்டத்தில் ஒன்பது சட்டசபை தொகுதிகளிலும், கடந்த 2021 தேர்தலில் தி.மு.க., வெற்றி பெற்றது; நேரு, மகேஷ் அமைச்சர்களாகினர்.

இந்நிலையில், லால்குடி – சவுந்தரபாண்டியன், துறையூர் – ஸ்டாலின் குமார், முசிறி – தியாகராஜன், ஸ்ரீரங்கம் – பழனியாண்டி ஆகிய நான்கு எம்.எல்.ஏ.,க்களும், ‘எங்கள் தொகுதி பணிகளின் ஒப்பந்தங்களை கூட, அமைச்சர் நேருவே முடிவு செய்கிறார்; எங்களை மதிப்பதில்லை’ என கூறியதோடு , முதல்வர் ஸ்டாலினிடமும் புகார் அளித்தனர்.

பின், தியாகராஜன், ஸ்டாலின் குமார் ஆகியோர் அமைதியாக இருந்தாலும், பழனியாண்டி, சவுந்தரபாண்டியன் ஆகிய இருவரும், அமைச்சர் நேரு குறித்து வெளிப் படையாகவே விமர்சனங்களை கூறி வந்தனர்.

இது, நேருவை தர்மசங்கடப்படுத்தினாலும், அவர் எதையும் வெளிக்காட்டிக் கொள்ளாமல் இருந்தார்.

இந்நிலையில், நேற்று வெளியான தி.மு.க., வேட்பாளர் பட்டியலில், முசிறி – தியாகராஜன், ஸ்ரீரங்கம் – பழனியாண்டி, லால்குடி – சவுந்தரபாண்டியன் ஆகிய மூவருக்கும் மீண்டும் வாய்ப்பு அளிக்கப்படவில்லை; அத்தொகுதிகளில் புதுமுகங்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் துறையூர் தொகுதியை, கூட்டணி கட்சியான காங்கிரசுக்கு ஒதுக்கி விட்டதால், அத்தொகுதி தி.மு.க., – எம்.எல்.ஏ., ஸ்டாலின் குமாருக்கும் வாய்ப்பு பறிபோனது.

இதன் வாயிலாக, தன்னை எதிர்த்த நான்கு எம்.எல்.ஏ.,க்களுக்கும் சீட் கிடைக்க விடாமல் நேரு தடுத்து விட்டதாக, அந்த எம்.எல்.ஏ.,க்களின் ஆதரவாளர்கள் கூறி வருகின்றனர்.

Source link