மோசமான ஆட்சியை தி.மு.க., நடத்துகிறது மத்திய அமைச்சர் அர்ஜுன் ராம் குற்றச்சாட்டு

திருப்பூர்: ”தமிழகத்தில், மோசமான ஆட்சியை தி.மு.க., நடத்தி வருகிறது,” என, மத்திய அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் குற்றஞ்சாட்டினார்.

திருப்பூர் வடக்கு மாவட்ட பா.ஜ., அலுவலகத்தில், நேற்று நடந்த தேர்தல் ஆலோசனை கூட்டத்தில், பா.ஜ., மேலிட இணை பொறுப்பாளரான மத்திய அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் பங்கேற்றார். அவர் பேசியதாவது:

கடந்த தேர்தலின்போது, தி.மு.க., தேர்தல் அறிக்கையில், பொருளாதாரத்தை உயர்த்துவோம்; சட்டம் – ஒழுங்கில், தமிழகத்தை முன்மாதிரியாக இருக்க செய்வோம் என்றெல்லாம் கூறினர். ஆனால், கடந்த ஐந்தாண்டு காலத்தில், தன் குடும்பத்தை மட்டுமே உயர்த்தி வந்துள்ளனர்.

சட்டம் – ஒழுங்கு என்பதே இல்லாமல் போய்விட்டது. தினமும் ஒரு கொலை, கொள்ளை, போதை பொருள் விற்கும் இடமாக தமிழகம் மாறி விட்டது. பெண்களுக்கு எதிரான குற்றங்கள், தினந்தோறும் நடக்கிறது. மிக மோசமான ஆட்சியை, தி.மு.க., நடத்தி வருகிறது. தேர்தலில், மத்திய அரசின் திட்டங்களை எடுத்துரைத்து பா.ஜ.,வினர் ஓட்டு கேட்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

அண்ணாமலையுடன் சந்திப்பு தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலையை, இந்த தேர்தலில் போட்டியிட வைக்க ஆர்.எஸ்.எஸ்., தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இது தொடர்பாக அந்த அமைப்பின் நிர்வாகிகள், பா.ஜ., அமைப்புச் செயலர் சந்தோஷிடம் பேசியுள்ளனர். இந்நிலையில், நேற்று கோவை வந்த மத்திய சட்ட இணை அமைச்சர் அர்ஜுன்ராம் மேக்வால், அண்ணாமலையை சந்தித்துப் பேசினார். 40 நிமிடங்கள் நடந்த இந்த சந்திப்பின்போது, கட்சியில் தனக்கு எதிராக நடக்கும் சதிகள் பற்றி அண்ணாமலை எடுத்துக் கூறியுள்ளார். அவரை சமாதானப்படுத்திய அர்ஜுன்ராம் மேக்வால், ‘நீங்கள் போட்டியிட வேண்டும் என்பது மேலிடத்தின் விருப்பம். உங்களுக்கான தொகுதி, அ.தி.மு.க.,விடம் கேட்கப்பட்டுள்ளது’ என கூறியதாக பா.ஜ., நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.

Source link