அ.தி.மு.க.,வில் 'சீட்' கிடைக்காததால் 'மாஜி' எம்.எல்.ஏ., போராட்டம்

நாமக்கல்: நாமக்கல் தொகுதியில் ‘சீட்’ வழங்காததால், அ.தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., பாஸ்கர், தன் ஆதரவாளர்களுடன், ‘மாஜி’ அமைச்சர் தங்கமணி வீட்டை முற்றுகையிட்டார்.

நாமக்கல் தொகுதி அ.தி.மு.க., வேட்பாளராக, கட்சியின் மாநில வர்த்தக அணி செயலர் ஸ்ரீதேவி மோகன் அறிவிக்கப்பட்டுள்ளார்.

இதனால், அந்த தொகுதியில் ‘சீட்’ கிடைக்கும் என எதிர்பார்த்திருந்த, முன்னாள் எம்.எல்.ஏ., பாஸ்கர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். மாவட்ட செயலரும் முன்னாள் அமைச்சருமான தங்கமணி தலையீட்டால், வாய்ப்பு மறுக்கப்பட்டதாக கூறி, பள்ளிப்பாளையம் அருகே கோவிந்தம் பாளையத்தில் உள்ள தங்கமணி வீட்டை, தன் ஆதரவாளர்களுடன் சென்று பாஸ்கர் நேற்று முற்றுகையிட்டார்.

பாஸ்கர் கூறுகையில், “அ.தி.மு.க.,வில், நான்கு மாவட்ட செயலர்களை பார்த்து விட்டேன். தங்கமணி கில்லாடியா இருக்கலாம்; நான் அவரை விட கில்லாடி.

”தங்கமணி சர்வாதிகாரியாக செயல்படுகிறார். அ.தி.மு.க.,வில் நாமக்கல் மாவட்டத்தை இரண்டாக பிரிக்க வேண்டும்,” என்றார். நாமக்கல் வேட்பாளர் ஸ்ரீதேவி மோகனுக்கு எதிராக, நான்கு ஒன்றிய செயலர்கள் உள்ளிட்ட சிலரும் போர்க்கொடி துாக்கி உள்ளனர்.

எனவே, பாஸ்கரின், கட்சி பதவி பறிக்கப்படும் என கூறப்படுகிறது.

இதற்கிடையே, தங்கமணி கூறுகையில், “முன்னாள் எம்.எல்.ஏ., என்ற நாகரிகம் கூட தெரியாமல், நான் வீட்டில் இல்லாதபோது, சாலையை மறித்து, ரவுடி போல் மிரட்டி சென்றுள்ளார். இதற்கெல்லாம் நான் பயப்படும் ஆள் கிடையாது,” என்றார்.

Source link